சினிமா

நாளை முதல் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி: தமிழகத்தில்முழுவீச்சில் தயாராகும் தியேட்டர்கள்

kaleelrahman

நான்கு மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து சேலம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் திரையரங்குகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி:

கொரோனா 2வது அலை பரவல் அதிகமானதைத் தொடர்ந்து மே மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், திரையரங்குகள் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இதைடுத்து கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவந்த நிலையில், ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தமிழக அரசு நேற்று பல தளர்வுகளை அறித்தது. அதில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

இதையடுத்து நாளை முதல் தமிழகத்தில் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் திரையரங்க பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி இருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன.

சேலம் மாவட்டம்: 

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், புதிய திரைப்படங்கள் எதுவும் இல்லாததால் திரையில் திரையிட முடியாத சூழ்நிலை உள்ளதால், எந்த படங்களை திரையிடுவது என்ற குழப்பத்தில் உள்ளதாகவும், திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்று கூடி ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

கோவை மாவட்டம்:

அதேபோல் கோவை தியேட்டர் உரிமையாளர் பாலசுப்ரமணியம் கூறும்போது, "தினந்தோறும் சுமார் 13 பணியாளர்களை கொண்டு திரையரங்கு முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படம் பார்க்க வரும் ரசிகர்களை முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் போன்றவற்றை சரி பார்ப்பது என பாதுகாப்பு நடவடிக்கைகள் ஈடுபட உள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும், திரையரங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தபடாது என தெரிவித்த அவர், அரசு அறிவுறுத்திய கட்டுப்பாட்டு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கபடும் என்றார். மேலும் கொரோனா அலை பரவல் காரணமாக நஷ்டத்தை சந்தித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள், தமிழக அரசு புதிதாக விதித்துள்ள வரி மற்றும் கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

நெல்லை மாவட்டம்:

கடந்த 119 நாட்களுக்கு பின்னர் கட்டுப்பாடுகளுடன் திரையரங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் கிருமிநாசினி கொண்டு திரையரங்கை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளதால் ஒரு இருக்கைக்கு ஒரு இருக்கை இடைவெளிவிட்டு ஸ்டிக்கர் ஒட்டும் பணி, ப்ரொஜெக்டர் உள்ளிட்ட திரையரங்கின் அடிப்படைத் தேவைகளை சரி செய்யும் பணி என பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திரையரங்கு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரையரங்கு பணிக்கு வரும் ஊழியர்களுக்கும் உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவைகள் செய்த பின்னரே பணி செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்:

திரையரங்குகளை திறக்க தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு இருக்கைவிட்டு மற்றொரு இருக்கையில் அமரவைத்து தியேட்டரை இயக்கலாம். கிருமி நாசினி தினமும் தெளிக்க வேண்டும். குளிர்சாதனம் பயன்படுத்தக் கூடாது. கூடுதல் காட்சி இயக்கம், எண்ணிக்கைக்கு அதிகமானவர்களை அனுமதித்தல் கூடாது என பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நாளை முதல் தமிழகமெங்கும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் தற்பொழுது திரையரங்குகளை சுத்தம் செய்து, பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது.