சினிமா

ஒரு அப்பா தன் மகளுக்கு என்னவெல்லாம் செய்யமுடியும்? - பேரன்பு திரைப்பார்வை..!

webteam

ஒரு அப்பா தன் மகளுக்கு என்னவெல்லாம் செய்யமுடியும்? என்கிற கேள்விக்கு ‘எதுவும்’ என்கிற ஒற்றை வார்த்தையால் இயக்குநர் ராம் வடித்திருக்கும் பேரன்பின் கவிதையே ‘பேரன்பு’ திரைப்படம்.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பாப்பாவிற்கும், எப்போதும் மகள் மீதான பிரியத்தை மட்டுமே சுமந்தபடி திரியும் அமுதவனுக்கும் இடையிலான உறவின் உன்னதம் பேசும் படைப்பாக ‘பேரன்பை’ விதைத்திருக்கிறார் ராம். ஒரு அப்பா, மகளின் நன்மைக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராய் இருக்கிறார். அது எப்படியெல்லாம் பயணிக்கிறது என்பதை இயற்கையுடன் தொடர்பு படுத்தி 12 அத்தியாயங்களாய் ’பேரன்பை’ உணர்த்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். எல்லா மகளையும் போல், தன் மகள் இல்லை என்பதை உணர்வதே துயரம். ஆனால், அதனை உணர்ந்ததோடு மட்டுமின்றி அவளுக்காக எல்லாமும் செய்யும் பெரும் துயரத்தை அமுதவன் கதாபாத்திரத்துக்குள் புகுத்தியிருக்கிறார் ராம். உதாரணத்துக்கு, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட, பதின் பருவமெய்திய தன் மகளுக்கும் பாலியல் ரீதியான உணர்வுகள் இருக்கிறது என்பதை உணரும் ஒரு அப்பாவின் நிலை இதுவரை தமிழ் சினிமா கண்டிராதது. ஆனால், அதனை தன் காட்சியமைப்புகள் மூலம் இன்னும் கனமேற்றி துயரின் கவிதையாக்கியிருக்கிறார் ராம்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மம்முட்டி, அமுதவன் எனும் அப்பாவாக தன் மகளையும், படத்தையும் நெடுக சுமந்தபடியே இருக்கிறார். தன் மகள் எந்தமாதிரியான கஷ்டத்தை அனுபவிக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள அவளைப் போல நடந்து பார்ப்பதில் தொடங்கி, பாப்பாவின் மாதவிடாய் நேரத்தில் அவளுக்கு உதவுவது வரை ஒவ்வொரு ஷாட்டிலும் அபாரமான நடிப்பு. சாதனா, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியாக கை, கால், வாய் என ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக நடிக்க வைத்திருக்கிறார். ‘பேரன்பு’ படமே அவர் கதாபாத்திரத்தை வைத்துதான் எனும்போது, அதற்கான முழு உழைப்பையும் கொடுத்து தமிழ் சினிமாவிற்கே பாப்பாவாக மாறியிருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், ரசனையான கதாபாத்திரம் அஞ்சலிக்கு. பாவல் நவகீதன் மனைவியாக இருந்துகொண்டு, நடிக்க வரும் இடத்தில் மம்முட்டியையும் திருமணம் செய்துகொள்கிறார். அவர் நல்லவரா? கெட்டவரா? என யோசித்துக் கொண்டு இருக்கும்போதே அவர் கதாபாத்திரம் கதையில் இருந்து விலகுவது இயக்குநர் ராம் ‘டச்’.

‘பேரன்பு’ படம் நெடுக மம்முட்டி, சாதனாவின் முகங்களே திரை நிரப்பிக் கொண்டிருக்கையில் இடையிடையே வரும் பாவல் நவகீதன், ஓடிவந்து பாப்பாவை முண்டக்கன்னியம்மன் கோவிலுக்கு அழைத்துப் போகச் செல்லும் ஓட்டல் சிறுவன், வீட்டின் உரிமையாளரான அந்த வெளிநாட்டுப் பயணி, படகோட்டி, திருநங்கை அஞ்சலி, அமீர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிறைகின்றன. மாற்றுத்திறனாளி குழந்தை என்பதால் மனைவி பிரிந்துவிட, தன் மகளுக்காக மனிதர்கள் இல்லாத, குருவிகள் சாகாத ஒரு இடத்திற்கு நகர்கிறார்கள் அமுதவனும், பாப்பாவும். ஒரு சிறு நதியின் அருகே, புல்வெளியில், அடர் பனிக்குள் கவிதையைப் போன்ற ஒரு மரவீட்டில் குடியேறுகிறார்கள். 

அத்தனை ரசனையான அந்த வீட்டை வடிவமைத்த கலை இயக்குநருக்கு ஆயிரம் பாராட்டுகள். பேரன்பை பெரும் பிரயத்தனத்தோடு தன் தோள்களில் சுமந்த கலைஞர்களில் மிக முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். இயற்கையை இயற்கையாக மட்டுமே பதிவு செய்து திரை விரித்திருக்கிறார். பனி மூட்டத்துடன் தொடங்குவதாலோ என்னவோ, பெரும்பாலான காட்சிகள் சில்லிடுகின்றன. அவரைப் போலவே, படத்தொகுப்பாளர், சூர்யா பிரதாமனின் பணியும். காட்சிகளின் நீளத்தை உணர்ந்து நறுக்கியிருக்கிறார்.

பேரன்பின் உணர்வை இதயங்களுக்குக் கடத்த யுவன்ஷங்கர் ராஜா தன் இசைக்கருவிகளை துணைக்கு அழைத்திருக்கிறார். மென்மையின் வலிமை பேசுகிறது பின்னணி இசை. பாடல்களையும் ஒரு சிட்டுக்குருவியின் சிறகடிப்பைப் போலவே உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் யுவன். பனி விலக்கும் மெல்லிய கதிர் போல தொடங்கும் பேரன்பின் வெப்பம், போகப்போக உஷ்ணமாய் மாறி சுடுகிறது. அதற்கு ராமின் திரைக்கதையமைப்பும், வசனங்களும் துணை நிற்கின்றன. மாற்றுத்திறனாளி மகளை சுமந்துகொண்டே இருக்கும் அமுதவன் எடுக்கும் ஒரு முடிவு துயரத்தை பார்வையாளனுக்குள் பதியம் போடுகிறது.

பேரன்பில் ஒரு அப்பா – மகளின் அழுகை கவிதையாகியிருக்கிறது. சிரிப்பு கவிதையாகியிருக்கிறது. மவுனம் கவிதையாகியிருக்கிறது. வலி கவிதையாகியிருக்கிறது. உணர்வு கவிதையாகியிருக்கிறது. துயரம் கவிதையாகியிருக்கிறது. ஒரு இடத்தில், “நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருக்கீங்க” எனும் வசனம் வரும். படம் நிறைவடைகையில், அந்த வசனத்தின் புள்ளியில் இருந்து நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆதியில் விதைக்கப்பட்ட பேரன்பின் விதை விருட்சமாய் வளரத் தொடங்கும்.