Avinash Kolla Peddi
சினிமா

ஒரு வருடத்திற்கு மேலான தயாரிப்பு, 24 பிரம்மாண்ட செட்கள்! - `பெத்தி' குறித்து அவினாஷ் | Peddi

70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளோம். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

Johnson

ராம்சரண் நடிக்கும் புச்சி பாபு சனா இயக்கும் ‘பெத்தி’ படத்திற்காக தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ், ஒரு வருடத்திற்கும் மேலாக முன் தயாரிப்பில் ஈடுபட்டு 24 பிரம்மாண்ட செட்களும் 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கியதாக கூறுகிறார். 70, 80களின் விஜயநகரம் சூழலை இயல்பாக மீண்டும் படைத்த இந்த படம், பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தும் என அவர் நம்புகிறார்.

ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் படம் `பெத்தி'. ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, பொம்மன் இராணி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜூன் 4ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் குறித்து படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்து கொண்ட தகவல்கள் பின்வருமாறு, "இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே என்னை ஆழமாக பாதித்துவிட்டது. எனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை, கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டது.

Ram Charan, Peddi

இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது, 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கப்பட்டது. 70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளோம். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே எனது நோக்கம், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளது.

Peddi

படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டது. குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. `லகான்' படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும். படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படம். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக கண்களில் கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு பெத்தியின் வாழ்க்கை பயணம் மனதை தொடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.