சினிமா

சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறினார் பார்வதி !

சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறினார் பார்வதி !

webteam

நடிகை பார்வதி சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கேரளாவில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழில், பூ, மரியான், உத்தமவில்லன் உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி. கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர், கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவரை கேரள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த பிரச்னையில் நடிகர் சங்கத்துக்கு எதிராகவும் அவர் பேசி வந்தார்.

அதோடு, நடிகைகள் சிலர் தொடங்கியுள்ள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பிலும் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். முன்னணி நடிகரான மோகன்லால், மம்மூட்டிக்கு எதிராகவும் அவர் கருத்துக் கூறி வந்தார். இந்நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்காமல் மலையாள சினிமா உலகம் ஓரம் கட்டுகிறது என்றும் நடிகர் சங்கத்தை எதிர்ப்பதால் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் பரபரப்பு புகார் கூறியிருந்தார். 

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகச் செயல்பட்டு வரும் இப்போது அதில் இருந்து வெளி யேறிவிட்டார் என்று மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த ஆகஸ்ட் மாதம், ‘இன்ஸ்டாகிராமில் என்னை பின் தொடர்பவர்களுக்கும் எனது கருத்துகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கும் நன்றி. இதில் இருந்தும் சினிமாவில் இருந்தும் எனக்கு கொஞ்சம் இடைவெளி தேவைப்படுகிறது. அதனால் கொஞ்ச காலம் இன்ஸ்டாகிராமுக்கு வரமாட்டேன். பாதுகாப்பாக இருங்கள், அன்பாக இருங்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் கேரள மழை, வெள்ளத்துக்குப் பிறகு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இயங்கி வந்தார். இப்போது திடீரென்று அதில் இருந்து விலகியுள்ளார். அவரது பக்கங்களும் திடீரென மாயமாகியுள்ளது.