சினிமா

“அங்கிள் அப்டி தொடாதீங்க?” - குட் டச்; பேட் டச் பற்றி பேசும் குறும்படம்

“அங்கிள் அப்டி தொடாதீங்க?” - குட் டச்; பேட் டச் பற்றி பேசும் குறும்படம்

Rasus

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்..? அப்படிப்பட்ட பேர்வழிகளை எப்படி குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிப்பது என்பன உள்ளிட்டவைகளை விளக்கும் குறும்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இது அமைந்துள்ளது.

தினசரி நாளிதழ்களை புரட்டும் போதும், செய்தி சேனல்களை பார்க்கும் போதும் கட்டாயம் ஒரு குற்றச்சம்பவம் இடம்பெற்றிருக்கும். 3 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல், 7 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை என நாளுக்கு நாள் அந்தச் செய்தியை பார்க்கும் நாம் ஓரிரு நாள் மன துக்கத்திற்கு பின் எளிமையாக மறந்து விடுவோம். அதேபோல நம் வீட்டு குழந்தைக்கு ஏற்பட்டால் நிலைமை என்ன..? என்பதையும் சிந்திக்க தவறிவிடுவோம். குழந்தைகள் நல்லவர்களுடன்தான் பழகுகிறார்களா..? நல்லவர்கள் யார்..? கெட்டவர்கள்...? நல்ல தொடுதல் எது..? கெட்ட தொடுதல் எது..? என்பது அவர்களுக்கு தெரிகிறதா என்பதையும் கவனிக்க மறந்திருப்போம்.

பொதுவாகவே குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும்பாலும் குழந்தைக்கு நெருக்கமான உறவினர்கள் மூலமாகவே தெரிந்தவர்கள் மூலமாகத்தான் நடத்தப்படுவதாக கூறுகிறது ஆய்வு. அதாவது டியூசன் செல்லும் குழந்தைக்கு வன்கொடுமை... பள்ளி வேன் ஓட்டுநரின் வன்கொடுமை என  குழந்தைகள் தினசரி சந்திக்கும் நபர்கள் மூலமாகத் தான் அவர்கள் பெரும்பாலும் இன்னலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சாக்லெட் வாங்கி கொடுத்து ஏமாற்றுவது என குழந்தைகளின் மனதை புரிந்துகொண்டு சில பேர்வழிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.  குழந்தைகள் மீது நடத்தப்படும் குற்றச் சம்பவங்களிலிருந்து அவர்களை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் நபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட்டாலும் குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை. அவ்வாறான பேர்வழிகள் மனதை நம்மால் சரிசெய்ய முடியாது என்றாலும், குழந்தைகளுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.

ஒரு 7 வயது சிறுமிக்கு டியூசன் மாஸ்டர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்றால் அது என்னவென்றே முதலில் குழந்தைக்கு சொல்லத் தெரியாது. அது தனக்கு இழைக்கப்படும் கொடுமையா என்பதையும் குழந்தைக்கு புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் விவரம் புரியாத வயது அது. எனவே நல்ல தொடுதல் எது.? கெட்ட தொடுதல் எது? என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நம் குழந்தைகளை நம்மால் பாதுகாக்க முடியும். அதுதொடர்பான விழிப்புணர்வு குறும்படம் (Touch me not) ஒன்றுதான் சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. ஹரி பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நாளுக்கு நாள் டிபி மாற்றுவது.. அதற்கு எவ்வளவு லைக் வந்திருக்கிறது என பொழுதுபோக்கிற்காகவே ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் இளைஞர்கள் இதுபோன்ற நல்ல வீடியோக்களையும் கொண்டாட தவறுவதில்லை. குறும்படத்தில் பள்ளி சிறுமியை ஆட்டோ டிரைவர் ஒருவர் தவறுதலாக தொடுகிறார். உடனே அந்தச் சிறுமி ‘நீங்கள் தொடுவது சரியல்ல.... ஏன் இப்படி செய்கிறீர்கள்’ என கேள்வி கேட்கிறார். பின்னர் வீட்டிற்கு வந்ததும் தனது தாயாரிடம் தெரிவிக்க இதுகுறித்து போலீசில் புகார் கொடுப்போம் என அந்தச் சிறுமியின் தாயார் தெரிவிக்கிறார். கயவன் பயந்து தப்பித்துச் செல்கிறான். அதனைப்போல  மடியில் உட்கார வைக்கும் மாமா அத்துமீறும் போதும், அண்ணன் எனக் கூறிக்கொண்டு சிறுமியை ஒருவர் அறையில் வைத்து பூட்ட முயற்சிக்கும் போதும் சிறுமி கத்திவிடுவேன் என மிரட்டுகிறார். அம்மாவுடன் சொல்லி விடுவேன் எனவும் கூறுகிறார். நல்லது எது கெட்டது எது என தெரிந்து, தைரியமான சிறுமியாக அந்தக் குழந்தை வளர்க்கப்படுவது போன்று திரைக்கதை அமைந்துள்ளது அக்குறும்படத்தில்.

நாம் நம் குழந்தைகளுக்கு ‘குட் டச்’ எது ‘பேட் டச்’ எது என்பதை சொல்லித் தருதல் கட்டாயம். அதனை தவறவிட்ட பெற்றோர்கள் இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள். நம் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு நாமும் ஒருவிதத்தில் காரணமாக இருந்துவிடக் கூடாது அல்லவா..? பெற்றோர்களே இது நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது.