சினிமா

“எனக்கு என்ன செய்கிறது என்றே தெரியலை” - பரவை முனியம்மா சோகம்

“எனக்கு என்ன செய்கிறது என்றே தெரியலை” - பரவை முனியம்மா சோகம்

webteam

நாட்டுப்புறப் பாடல்களாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பாலும் ரசிகர்களின் மனதை வென்ற பரவை முனியம்மா, உடல்நலக்குறைவாலும், வறுமையாலும் பரிதவித்து வருகிறார்.

தூள் திரைப்படத்தில் ‘சிங்கம் போல நடந்து வாரான் செல்லப்பேராண்டி’ பாடல் மூலம் தமிழ் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் நாட்டுப்புற பாடகர் பரவை முனியம்மா. மதுரை அடுத்த பரவை என்ற ஊரை சேர்ந்த இவர், 84 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக இருதய கோளாறு, நுரையீரல் தொற்று பாதிப்பினால் நடக்க முடியாமலும், சரியாக பேச முடியாமலும் படுத்த படுக்கையாக முடங்கியுள்ளார். 

83 வயதான இவருக்கு 3 மகள்கள் 3 மகன்கள் உள்ள நிலையில், இளைய மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரின் எதிர்காலம் குறித்த கவலையில் பரவை முனியம்மா ஆழ்ந்துள்ளார். 

கடந்த 2014 ஆம் ஆண்டில் அவரது கணவர் வெள்ளைச்சாமி இறப்பிற்குப் பின் உடல் நலம் மெல்ல மெல்ல பலவீனமடைய தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிப்பதை நிறுத்திவிட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மாவிற்கு தற்பொழுது உடல் நலம் மிகவும் பாதித்ததால் பேசவோ, நடக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களாக தனியார் மருத்துவமனையில் இவர், தொடர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது தொடர்ந்து மருத்துவம் பார்க்க போதிய பணம் இல்லாததால் மறுத்துவமனை சிகிச்சையை கைவிட்டு வீட்டில் வைத்து தங்களால் இயன்ற அளவிலான சிகிச்சையை வழங்கி வருவதாக கூறுகிறார் அவரது மகள். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தங்களது குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளதால் மருத்துவம் பார்க்க கூட முடியாமல் திகைத்து வருவதாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் கிடைக்கும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் பணம் ஒரு வாரத்திற்கான மருந்து மாத்திரை செலவிற்கே சரியாகிவிடுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.  

தனது அசாத்திய பாடல் திறமைகளால் கலைமாமணி விருது பெற்ற பரவை முனியம்மாள் தற்பொழுது சிகிச்சை பெற முடியாமல் உயிருக்கு போராடி வரும் நிலையில் அவருக்கான மருத்துவ சிகிச்சைக்காக உதவியை தமிழக அரசு செய்து உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர் அவரது உறவினர்கள்.

இதுகுறித்து பரவை முனியம்மா பேசும்போது எனக்கு செய்கிறது என்றே தெரியவில்லை என்று கூறினார்.