சினிமா

"நாடு முழுவதும் ரசிக்கப்பட்டால் தான் பான் இந்தியா திரைப்படம்"-இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

"நாடு முழுவதும் ரசிக்கப்பட்டால் தான் பான் இந்தியா திரைப்படம்"-இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்

ஜா. ஜாக்சன் சிங்

நாடு முழுவதும் ரசிக்கப்பட்டால் தான் அது பான் இந்தியா திரைப்படம் என இயக்குனர் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

'கற்றது மற' என்ற திரைப்படக் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் சுசீந்திரன், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், "இன்று பல படங்கள் பான் இந்தியா என்ற பெயரில் வெளியாகின்றன. இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டால் அது பான் இந்தியா திரைப்படம் கிடையாது. மாறாக, நாடு முழுவதும் ரசிக்கப்பட்டால்தான் அது பான் இந்தியா திரைப்படம்.

எனவே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகம் முழுவதும் ரசிக்கும்படியான திரைப்படங்களை உருவாக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் முக்கியம் கிடையாது; கதை தான் முக்கியம். எனவே, கதையில் இயக்குநர்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்றைக்கு திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து பணத்தை பெறுவது தயாரிப்பாளர்களுக்கு கடினமாக உள்ளது. இன்று திரைப்படங்களை செல்போனில் பார்க்கும் வசதி வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக க்யூ ஆர் கோடினை (QR CODE) பயன்படுத்தி 25 ரூபாய் செலவில் ஒரு படத்தை பார்க்கும் வசதியை கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என அவர் கூறினார்.