அஜித் கண்டனம் pt
சினிமா

’இனி இதுபோன்று நடக்கக் கூடாது; சாதி, மத பேதமின்றி.. ’ - பஹல்காம் தாக்குதலுக்கு அஜித் கண்டனம்!

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார், இனி இதுபோன்று நடக்கக் கூடாது என பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்றைய தினம் நடைபெற்றது. மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 71 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அஜித்குமார் பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் வருந்துகிறேன். இந்த விவகாரத்தில் அரசு தன்னால் முடிந்ததை நிச்சயம் செய்யும் என்று நம்புகிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது.

என்று நான் பிரார்த்திக்கிறேன். டெல்லியில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்களை நான் கண்டிருக்கிறேன். இந்த சூழலில், சாதி மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது. அமைதியாகவும், ஒற்றுமையாகவும் நாம் வாழ வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.