பத்மாவத் திரைப்படம் அடுத்தவாரம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புதிய டீஸர் வெளியாகியுள்ளது.
பத்மாவத் திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பத்மாவத் படம் வெளியாகும் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்துவோம் என்று கர்னி சேனா உள்ளிட்ட ராஜபுத்திர சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பத்வாமத் திரைப்படத்தை வெளியிட 4 மாநில அரசுகள் விதித்து இருந்த தடைகளை உச்சநீதிமன்றம் நீக்கியது. அதேபோல், பத்மாவத் திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய மனுவையை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமைதான் என்று தெரிவித்தது. இருப்பினும், பத்மாவத் திரைப்படம் தொடர்பான பதற்றம் இன்னும் இருக்கவே செய்கிறது.
இந்நிலையில், பத்மாவத் படத்தின் புதிய டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. 30 நொடிகள் கொண்ட இந்த டீஸரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது. பத்மாவதியை உயர்த்தி பேசும் வகையிலே அந்த வசனங்கள் உள்ளது. ‘அலாவுதீன் கில்ஜியின் மரணம், ராஜபுத்திர ஆண்கள் கைகளில் இல்லை, தேவியின் அவதாரமான பெண்களின் கையில் தான்’ என்று பெண்களை போருக்கு தயார் படுத்து வகையில் தீபிகா வீர வசனம் பேசுகிறார். இந்த டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.