சினிமா

‘கேஜிஎஃப் பின்னணி என்பதால் பான் இந்தியா படமா?’ - ‘சியான் 61’ படம் குறித்து பா.ரஞ்சித்

சங்கீதா

விக்ரம் நடிப்பில் கே.ஜி.எஃப். பின்னணியில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள பீரியட் படமான ‘சியான் 61’ பான் இந்தியா படமாக எடுக்கப்போவதில்லை என இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ள முன்னணி நடிகரான விக்ரம், ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கும் புதியப் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் 19-ம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க வயல் பின்னணியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ‘சியான் 61’ திரைப்படம் பான் இந்தியா படம் இல்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற இந்தப்படத்தின் பூஜை விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய பா. ரஞ்சித், “இந்தப் படம் 19-ம் நூற்றாண்டில் கேஜிஎஃப்-ல் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள படம். இந்தப்படம் மிகவும் யதார்த்தமாக இருக்கும், ஆனால் அதே நேரத்தில், ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த மக்களின் வாழ்க்கையை உண்மையை அப்படியே இந்தப் படத்தில் பிரதிபலிக்கப்படும் வகையில் எடுக்கப்பட உள்ளது.

19-ம் நூற்றாண்டில் மெட்ராஸ் பிரசிடென்சி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்படவில்லை. எனவே அன்றைய புவியியல் அடிப்படையில் இந்தப்படத்தை 3 மாநிலங்களும் ஒன்றிணைந்த வகையிலேயே கதைக்களம் அமைக்க உள்ளோம். ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு அடுத்து, எழுத்தாளர் தமிழ் பிரபா இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

இந்தப் படம் தமிழ்ப் படமாகவே தயாரிக்கப்படும். பான் இந்தியப் படமாக உருவாக்க திட்டம் இல்லை. பான் இந்தியப் படங்கள் என்ற கருத்தை நான் நம்பவில்லை. தற்போதைய காலத்தில் மொழித் தடைகளை ஓடிடி தளங்கள் உடைத்துள்ளன. டப்பிங் படங்கள் எல்லா மாநிலங்களிலுமே வெற்றியடைந்து வருவதால், நீங்கள் எந்த மொழியில் படம் எடுக்கிறீர்கள் என்பது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது என்றே நினைக்கிறேன். அதனால் இது ஒரு நேரடி தமிழ்ப் படமாக இருக்கும், ஆனால் இந்தப் படம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் என்றே நம்புகிறேன்.

விக்ரம் போன்ற ஒரு நடிகருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சியாக உள்ளது. விக்ரம் எப்போதும் பார்வையாளர்களால் விரும்பப்படும் ஒரு அற்புதமான நடிகர்” இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் சோதனை படப்பிடிப்பு நடத்தவும் இயக்குநர் ரஞ்சித் மற்றும் விக்ரம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகே படத்தின் படப்பிடிப்பு முழுமையாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.