Veduvan Kanna Ravi
ஓடிடி திரைப் பார்வை

என்கவுன்டரால் ஏற்படும் கேள்விகளே இந்த `வேடுவன்'! | Veduvan | Kanna Ravi | Sanjeev

போலீஸின் வேலையை களமாக எடுத்துக் கொண்டு அந்த அமைப்பு யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி எழுப்பியதும் பாராட்டுக்குரியது.

Johnson

ஒரு என்கவுன்டரால் ஏற்படும் கேள்விகளே இந்த வேடுவன்!

தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் நடிகர் சூரஜ் (கண்ணா ரவி). அடுத்த படம் இதுவரை செய்யாத போலீஸ் ரோலில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் போது, ஒரு நிஜ என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் பயோபிக் கதை கதவை தட்டுகிறது. அக்கதை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆதி நாராயணன் (சஞ்சீவ்) என்ற தாதாவை தீர்த்துக்கட்டும் மிஷனாக விரிகிறது. அண்டர்கவர் போலீஸ் அருண், இந்த என்கவுன்டர் செய்து முடிக்கும் முன் என்ன சவால்களை எதிர் கொள்கிறார்? இந்தக் கதையை படமாக்கி நடிக்கும் சூரஜுக்குள் எழும் கேள்விகள் என்ன? என்பதெல்லாம் தான் இந்த சீரிஸின் மீதிக்கதை.

Veduvan

என்கவுன்டர்-க்கு எதிராக முன்வைத்திருக்கும் இயக்குநர் பவனின் கருத்து கவனிக்க வேண்டியது. போலீஸின் உளவு வேலையை களமாக எடுத்துக் கொண்டு அந்த அமைப்பு யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி எழுப்பியதும் பாராட்டுக்குரியது.

முதன்மை பாத்திரத்தில் கண்ணா ரவி, நடிகர் - போலீஸ் என இருவேறு பாத்திரங்களுக்கு வித்தியாசம் காட்டி நடிக்க முயல்கிறார். போலீஸ் வேலைக்காக மாறுவேடத்தில் இயல்பாக இருப்பவர், போலீஸ் ஆகவும், சினிமா ஸ்டாராகவும் நடிக்கையில் செயற்கையாக தெரிகிறார். சிவகங்கை தாதாவாக சஞ்சீவ், முடிந்த வரை ஒரு தெளிவான நடிப்பை கொடுக்க முயல்கிறார். ஆனாலும் அவர் இந்த வேடத்துக்கு இன்னும் பொருந்த வேண்டுமோ என்ற ஒரு துருத்தல் நம்மை தொந்தரவு செய்கிறது. ஷ்ராவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா, ஜீவா ரவி போன்றோர் ஒரு சம்பிரதாயமான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை போன்ற விஷயங்களும் சொல்லிக்கொள்ளும் அம்சங்களாய் அமையவில்லை.

Veduvan

எழுத்தாகவும், மேக்கிங்காகவும் மிக சுமாராகவே உருவாக்கப்பட்டிருக்கிறது சீரிஸ். என்கவுன்டர் என்ற பெயரில் அரசியல் கொலைகளும் நிகழ்த்தப்படுகிறது என்பதை சொல்லும் முனைப்பு பாராட்டத்தக்கது என்றாலும், அதை மிக மேலோட்டமாக அணுகியிருப்பதும், சொன்ன விதமும் அயர்ச்சியை உண்டு செய்கிறது. மேலும் இந்தக் கதைக்குள் ஒரு நடிகரின் கோணத்தை சேர்த்தது எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நேரடியாக போலீஸ் கதையை சொல்லி இருக்கலாமே, ஏன் நடிகர், பயோபிக் என சுற்றி வளைக்க வேண்டும் என்பது புரியவில்லை.  

இந்த சீரிஸின் ஒரே ஆறுதல், 7 எப்பிசோட்களாக விரியும் இந்த சீரிஸ் மொத்தம் ஓடுவதே இரண்டு மணிநேரங்கள் தான். மொத்தத்தில் புதிதாகவும், சுவாரஸ்யமாகவும் விஷயங்களை சேர்த்திருந்தால் கவனிக்க வைத்திருப்பான் இந்த `வேடுவன்'.