முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குப் பின் இருந்த நபர்களை காவல்துறை எப்படி கண்டுபிடித்தது என்பதைச் சொல்கிறது The Hunt - The Rajiv Gandhi Assassination Case.
எத்தனையோ தடங்கல்களுக்கு மத்தியில் ஸ்ரீபெரும்புதூர் வருகிறார் ராஜீவ் காந்தி. பயணத்திட்டத்தில் இறுதியாக சேர்க்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தான் அவர் செல்லப் போகும் கடைசிப் பயணமாக இருக்கும் என காங்கிரஸ்காரர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்த நாளுக்காகவே காத்திருந்த சிலர் , கச்சிதமாக அவர்களின் திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவே ஸ்தம்பித்தது. இந்திரா காந்தியைப் போலவே ராஜீவ் காந்தியின் மரணமும் இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. சுதந்திர இந்தியாவின் அரசியல் தலைவர் ஒருவர் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்படுவது அதுவே முதல் முறை என்பதால் பெரும் அதிர்ச்சியில் இருந்தது இந்திய உளவுத்துறை. எந்தவித க்ளூவும் இல்லாமல் திக்குமுக்காடிக்கொண்டிருந்த காவல்துறைக்கு இன்பதிர்ச்சியை கொடுத்தனர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள். தாணு முதல் சிவராசன் வரை ராஜீவ் காந்தி வழக்கில் யார் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், எல்லா புள்ளிகளையும் SIT எப்படி இணைத்தது; அதற்கிடையே இருந்த அரசியல் சதிகள் போன்றவற்றை த்ரில்லர் பாணியில் சொல்கிறது SonyLivல் வெளியாகியிருக்கும் The Hunt.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மையை, அதுவும் முப்பாதாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாக சொல்வது மிகவும் கடினம். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யார்; அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்; அவர்களில் இப்போது யாரெல்லாம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் பெரும்பாலான சாமான்யர்களுக்கு தெரிந்த விஷயங்கள். இதுவொன்றும், சுதந்திர இந்தியாவுக்கு முன் நிகழ்ந்த விஷயமோ, அல்லது அயல் தேசத்து விவகாரமோ இல்லை. ஆனால், அப்படி எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை எவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமோ அவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்கள் ரோஹித், நாகேஷ், ஸ்ரீராம் குழு. மூத்த பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இதன் கதையை எழுதியிருந்தாலும், சிலர் குறித்த விவரனைகளை லாவகமாக தடுத்து திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள்.
சிறப்பு புலனாய்வுக்குக் குழுவின் தலைவர் கார்த்திகேயனாக அமித் சியால். இன்சைடு எட்ஜ், மஹாராணி போன்ற தொடர்களில் சிறப்பான நடிப்பின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இதிலும் அதை சிறப்பாக தொடர்கிறார். இந்த சிஸ்டத்தின் வளைவு நெளிவுகளுக்குள் சிக்கிக்கொண்டு மூச்சித்திணறும் அதிகாரி அமித்தாக சாஹில் வைத் . மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து இந்தியாவின் பார்வைக்கும், தமிழ்நாட்டின் பார்வைக்கும் சிறிய வேறுபாடு இருந்தது. Indian Peace Keeping Force IPKFன் போற்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகவே இதைச் சிலர் பார்த்தார்கள். One Man's Hero is Another Man's terrorist என போகிற போக்கில் சொல்வார் சுகுமார். அதற்கு மறுமொழியாக Heroes Dont terrorize Anybody என்பார் அதிகாரி அமித். சில தினங்கள் கழித்து இதே வரியை அதிகாரி ரகோத்தமனும் சொல்வார். ராஜீவ் காந்தி படுகொலையை தமிழ்நாடு எப்படி அணுகியது, மற்றவர்கள் எப்படி அணுகினார்கள் என்பதை இவ்வளவு நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நளினி , பிரதமர் சந்திரசேகர், ராஜீவ் காந்தி என பலரின் உருவ ஒற்றுமைக்கு பொருந்தும் நபர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். தாங்கள் சிறப்பாக செய்திருக்கிறோம் என்பதை பறைசாற்ற ஒருவர் செய்த அதிமேதாவி செயலால் தான் ஒட்டுமொத்த கும்பலும் மாட்டியிருக்கிறது என கேசுவலாக சொல்கிறார் அதிகாரி கார்த்திகேயன். ராஜீவ் காந்தி கொலையாளிகளை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள் என்பதைவிட அவர்களாகவே வான்டடாக வந்து வண்டியில் ஏறி மாட்டிக்கொண்டார்கள் என்பதே உண்மை.
கொலையைச் செய்துவிட்டு திருப்பதிக்கு மொட்டை போட போவது; வந்த வேலை முடிந்துவிட்டால் குட்பை சொல்லாமல் அங்கேயே டேரா போட்டது என பார்க்கும் நமக்கே என்னம்மா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா என சொல்லும் அளவுக்கு வெள்ளந்தியாய் சிக்கிகொண்ட மனிதர்கள். ஆனால், இவர்களை வைத்து அரசியல் ஆட்டம் ஆட தலைவர்கள் நினைத்ததையும் சாமர்த்தியமாய் பதிவு செய்திருக்கிறார்கள். தொடரின் மற்றொரு பலம் தபாஸ் ரெலியாவின் இசை. ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லருக்கான மோடை தொடர் நெடுக கொடுத்திருக்கிறார். இடங்கள் தேர்வு , நடிகர்கள், கலை அமைப்பு என ப்ரொடக்சன் டீம் அசத்தியிருக்கிறது.
புத்தகத்தில் ராஜீவ் காந்தி கொலையைச் சுற்றி இருந்த பலரைச் சுற்றி கதை நகரும். ஆனால், தொடர் முழுக்க முழுக்க ஒரேயொரு அமைப்பை குற்றம் சாட்டுகிறது. அதனாலேயே சில இடங்களில் தொய்வாகிவிடுகிறது. அதே போல், பெரும்பாலான நடிகர்கள் இந்தி என்பதால் நமக்கு சில இடங்களில் ' கார்டு மேல இருக்குற 16 டிஜிட் சொல்லு சார்' டோனில் கேட்கிறது. ஆனால், இவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சமீப காலத்தில் வந்த மிகச்சிறந்த அரசியல் தொடர்களில் முக்கியமானது THE HUNT.
ராஜீவ் காந்தி படுகொலை குறித்து மட்டுமல்ல நல்லதொரு த்ரில்லர் பார்க்க விரும்புபவர்கள் நிச்சயம் THE HUNTஐ பார்க்கலாம்.