SQUID GAME  netflix
ஓடிடி திரைப் பார்வை

SQUID GAME 3 Review | எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா SQUID GAMEன் மூன்றாவது சீசன்..!

இப்படியான கதாபாத்திரங்களுக்கு மத்தியில் ஒரே ஆறுதல் நோ எல் கதாபாத்திரம் மட்டும் தான்.

karthi Kg

போர் ஆமாம் போர் என முழங்கி தன்னுடன் வந்த எல்லோரையும் காவு கொடுத்துவிட்ட பிளேயர் 456, மூன்றாவது சீசனில் என்ன செய்கிறார் என்பதே ஸ்குவிட் கேம் சீசன் 3ன் ஒன்லைன். 

போட்டியின் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டுமா அல்லது பங்கு பிரித்து வெளியேறிவிடுகிறீர்களா என்னும் புது கிளைக்கேள்வியுடன் இரண்டாவது சீசனை வெற்றிகரமாக ஆரம்பித்தது ஸ்குவிட் கேம். பிளேயர் 456ன் ஒரே குறிக்கோள் எப்படியாவது எல்லோரையும் அங்கிருந்து காப்பாற்றி இந்த விளையாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது தான். ஆனால், மனிதர்களுக்குள் இருக்கும் பேராசை அள்வளவு எளிதாய் அதை சாத்தியப்படுத்த விடுமா என்ன. பிளேயர் 456 உடன் போராட்டக்காரர்களாக மாறிய எல்லோரையும் சோல்ஜர்ஸ் போட்டுத்தள்ளிவிட, மீண்டும் ஆட்டத்துக்குள் அனுப்பப்படுகிறார் 456. இன்னும் மூன்று ஆட்டங்கள் . இத்தனை பேரின் கொலைக்கு காரணமாகிவிட்டோமே என்கிற மன அழுத்தத்திற்குள் இருக்கும் பிளேயர் 456, அதைக் கடந்து போட்டியில் நீடிக்கிறாரா, இந்த சீசனின் வெற்றியாளர் யார், டெடக்டிவ் ஜுன் ஹோ போட்டிகள் நடக்கும் இந்த தீவை அம்பலப்படுத்தினாரா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த மூன்றாவது சீசன்.

எல்லா முயற்சியிலும் தோற்றுப்போன பிளேயர் 456, இந்த சீசனில் என்ன செய்யப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவரை நம்பிச் சென்ற எல்லோரையும் அவர் காவு கொடுத்துவிட்ட சூழலில் இனி பெரிதாய் என்ன செய்துவிட முடியும் என்கிற கேள்வியுடன் சுவாரஸ்யமாகவே ஆரம்பித்தது மூன்றாவது சீசன். முதல் சீசன் அளவுக்கு எமோசனல் கதாபாத்திரங்கள் இதில் இல்லை என்றாலும், அம்மா & மகன் டீமும், பிளேயர் 222 , பிளேயர் 125 போன்ற சில நல்ல உள்ளம் கொண்ட கதாபாத்திரங்களையும் இந்த சீசனில் உலவ விட்டிருந்தார் ஸ்குவிட் கேம்ஸின் கிரியேட்டர் டொங் ஹூக். நான்காவது போட்டியான HIDE&SEEK ரத்தக்களறியாய் இருந்தாலும் கொஞ்சம் எமோசனலாக இருந்தது. இந்த சீசனின் ஆறாவது எபிசோடில் ' யார் செத்தா எனக்கென்ன ' என இருக்கும் ஒரு குழு ராக், பேப்பர் , சிஸர் ஆடுவது எல்லாம் சுத்தமான அக்மார்க் போங்கு. 

ஸ்குவிட் கேம்ஸ் முதல் சீசனின் முடிவில் வெற்றிகளைக் கடந்து நமக்குள் ஒரு அழுத்தம் உருவாகும். அதுதான் அந்த சீசனின் வெற்றிக்குக் காரணம்.  கடனுக்காக மனிதர்கள் எல்லாவித எக்ஸ்ட்ரீமுக்கும் போகிறார்கள் என்பதில் ஆரம்பித்து, குடும்பத்துக்காக அவர்கள் எடுக்கும் ரிஸ்க் என அது நீண்டது. ஆனால், இந்த சீசனில் பெரிதாக அப்படி எதுவுமே இல்லை. பிளேயர் 456க்காவது ஒரு நோக்கம் இருந்தது. ஃபிரன்ட் மேனுக்கு பிளேயர் 456ஐ தன்னைப் போன்ற ஒரு நபராய் மாறுகிறாரா என பார்க்க வேண்டும். அந்தக் காட்சிகள் மட்டும் சுவாரஸ்யமாய் இருந்தது. மற்றபடி எல்லாமே இங்கே இவர் சாக வேண்டும் என்கிற டைப்பில் வழிய வந்து வழுக்கி விழும் திரைக்கதை அமைப்பில் எழுதப்பட்ட கதாபாத்திரங்கள் தான். அதிலும் VIPக்களை வைத்து எழுதப்பட்டவை எல்லாம் ஹாஸ்டர் பட சீரிஸை ஹெவியாய் நினைவுபடுத்தின. இப்படியான கதாபாத்திரங்களுக்கு மத்தியில் ஒரே ஆறுதல் நோ எல் கதாபாத்திரம் மட்டும் தான்.

முதல் சீசன் இறுதியில் அடுத்த சீசனில் என்ன செய்யப்போகிறார்கள் என்கிற பேராவல் இருந்தது. இரண்டாவது சீசனை இரண்டாக வெட்டிய போதே அது பாதியாகக் குறைந்தது. மூன்றாவது சீசன் இறுதியில் கேட் பிளேங்கட்டை வைத்து சுபம் போட்டிருக்கிறார்கள். நான்காவது சீசன் அமெரிக்கா செல்வதற்கான எல்லா சாத்தியங்களையும் திறந்து வைத்திருக்கிறார் கிரியேட்டர்.  ஸ்குவிட் கேம்ஸ் ரசிகர்கள் நெட்பிளிக்ஸில் இருக்கும் SQUID GAME THE CHALLENGE என்கிற ரியாலிட்டி ஷோவையும் பார்த்துவிடுங்கள்.