Cosmo Jarvis
Cosmo Jarvis  SHOGUN
ஓடிடி திரைப் பார்வை

SHOGUN Review | ஜப்பானின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பிய ஆங்கிலேயர்... ஷோகன் ஒரு பார்வை..!

karthi Kg

17ம் நூற்றாண்டில் ஜப்பானின் அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் உருவாகிறது. வெற்றிடத்தில் பலர் பரமபதம் விளையாட இறுதியில் என்ன நடந்ததே என்பதே ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கும் SHOGUN தொடரின் ஒன்லைன்.

முன்குறிப்பு : இது முழுக்க முழுக்க டிராமா பாணியிலான போரை மையப்படுத்திய சீரிஸ். என்னப்பா சர சரன்னு போக வேண்டாமா டைப் ஆடியன்ஸ் நீங்கள் என்றால் உங்களுக்கு செட் ஆவது கடினம். ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம் வரை போகும்.

ஜப்பானிய கரை தட்டி நின்றுவிடுகிறது ஒரு ஆங்கிலேயே கப்பல். கப்பலில் இருக்கும் ஆங்கிலயர்களுக்கோ ஜப்பானின் நிலப்பரப்பும் புதிது. மொழியும் புதிது. வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே இருமொழி புரிந்தவர்கள் போர்ச்சுகீசியர்கள் மட்டுமே. ஆனால், ஏற்கெனவே போர்ச்சுகீசியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் பிரச்னை. இப்படியான சூழலில் ஜப்பான் மன்னன் டொரானகாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடத்தில் வந்து சிக்கிக்கொள்கிறார் மாலுமியான ஜான் பிளாக்தோர்ன். பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு ஜான் பிளாக்தோர்னுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் டொரானகா. அதே சமயம், டொரானகாவின் கழுத்துக்கு கத்தி வைக்கிறார்கள் பிற மன்னர்கள். அந்த நாட்டின் சிண்டிகேட் பிரச்னைகள் போல. இப்படியான சூழலில் பிளாக்தோர்னின் வருகையை தனக்குச் சாதகமாக பயன்படுத்துகிறார் டொரானகா. இவர்கள் இருவரும் பேசிக்கொள்ள இணைப்புப்பாலமாய் உள்ளே வருகிறார் மேரிகோ. ஆங்கில புலமையும், ஜப்பானிய புலமையும் ஒருங்கே பெற்ற மேரிகோ அழியா பழியையும் தன் குடும்பத்தின் சொத்தாக சுமந்து வருபவர். அதன் பொருட்டு, தன் கணவரால் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டவள். டொரானகா தனக்கு எதிராக பின்னப்பட்ட வலையில் இருந்து தப்பித்தாரா; மேரிகோவைப் போல பிளாக்தோர்னுக்கும் கறுப்புப் பக்கம் ஏதேனும் உண்டா உட்பட பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்த 10 எபிசோடுகளைக் கொண்ட ஜப்பானிய தொடர். ஹாட்ஸ்டாரில் இனி வாரம் ஒரு எபிசோடு என வெளியாகவிருக்கிறது.

Cosmo Jarvis | Tadanobu Asano

இந்தத் தொடரின் பெரும்பலம் அதில் நடித்த நடிகர்களின் நடிப்பும், கதை எழுதப்பட்ட விதமும் தான். எல்லாம் நடிகர்களுமே மிரட்டியிருக்கிறார்கள். எல்லாமும் தனக்கு கிடைக்கவேண்டும் என்கிற ஆர்வமும், அதுகிடைக்காத போது லேசாக மட்டும் அதை வெளிப்படுத்திவிட்டு தக்க சமயத்துக்காகக் காத்திருக்கும் யபுஷிகேவாக Tadanobu Asano. தன் ராஜாங்கத்தில் தன்னைச் சுற்றி அத்தனை சதிவலைகள் பின்னப்படும் போது, அதைக் களையும் லாவகத்துடன் செயல்படும் டொரானகாவாக Hiroyuki Sanada . புதிய மண், புதிய மனிதர்கள் ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து ஒருநாள் தப்பித்துவிடும் என காத்திருக்கும் பிளாக்தோர்னாக Cosmo Jarvis . பாவத்தை சுமந்துகொண்டு திரியும், வார்த்தைகளை அளந்து பேசும் மேரிகோவாக Anna Sawai.

உண்மை வரலாற்றில் சிற்சில மாற்றங்களைப் புகுத்தி இதை நாவலாக்கியவர் ஜேம்ஸ் கிளாவல். 1980களில் ஏற்கெனவே ஒருமுறை இது மினிசீரிஸாக வெளியானது. ஆனால், அதைவிடவும் மேக்கிங்கிலும் நடிப்பிலும் இந்த முறை பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தலைமுறைவிரும்பும் சர சர திரைக்கதையோ, அதிரடி சண்டைக் காட்சிகளோ இதில் நிச்சயம் இருக்காது. ஒவ்வொரு எபிசோடும் கிட்டத்த 1 மணி நேரம். ஆனால், இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான மன இறுக்கத்தை உருவாக்குகிற காட்சிகளை அவ்வளவு அழகாக எடுத்திருக்கிறார்கள். குறைவான ஒளியில் நிறைய ஷாட்களை படமாக்கியிருக்கிறார்கள். பிளாக்தோர்ன் ஆங்கிலத்தில் பேசுவதையும், டொரானகா ஜப்பானிய மொழியில் பேசுவதையும் மேரிகோ தான் மொழிபெயர்த்தாக வேண்டும். அதில் அவர் ஆடும் ஆட்டங்களையும் சேர்த்துத்தான் கதை நகரும். அதில் சுவாரஸ்யங்களும் உண்டு. ஜப்பானிய மொழியில் தான் ஹாட்ஸ்டாரிலும் உண்டு. ஆங்கில சப்டைட்டில்கள் வரும்.

1970களில் நடிகர்களின் நடிப்பு, திரைக்கதை போன்றவற்றை மட்டுமே நம்பி திரைப்படங்கள் வெளியான காலம் உண்டு. பின்னாட்களில் அவை தான் க்ளாசிக்குகளாக நிலைபெற்று நிற்கும். அப்படியானதொரு ஜப்பானிய கிளாசிக்காக நிச்சயம் இந்த ஷோகன் நிலைத்து நிற்கும்.