மஞ்சு தேவிக்கும் கிராந்தி தேவிக்கும் நடக்கும் தேர்தல் யுத்தமே இந்த பஞ்சாயத் தொடரின் நான்காம் பாகத்தின் ஒன்லைன்.
CAT தேர்வில் பெரிய அளவில் சாதித்து வாழ்க்கையில் சாதிக்கலாம் என நினைத்த அபிஷேக் திரிபாதிக்கு வாழ்க்கையை நகர்த்த கிடைத்தது என்னவோ கிராம பஞ்சாயத்தில் செயலாளர் பணி தான். அந்த வேலையை கவனித்துக்கொண்டே CAT தேர்வுக்கு படித்து வருவதுதான் அபிஷேக்கின் பொழுதுபோக்கு. ஆரம்பத்தில் கொஞ்சம் முட்டல் முனகல் இருந்தாலும், கிராம பஞ்சாயத்து தலைவரான மஞ்சு தேவி & பிரிஜ் பூஷன் குடும்பத்துடன் இணக்கமாகிவிடுகிறார் அபிஷேக். பஞ்சாயத்து தலைவரின் மகள் ரிங்கியுடன் அபிஷேக்கிற்கு காதல் வேறு வர , கிட்டத்தட்ட வந்த வேலையை விட்டுவிட்டு பஞ்சாயத்து தலைவர் ரேஷன் கார்டிலேயே மெம்பர் ஆகும் அளவுக்கு க்ளோஸ் ஆகிவிடுகிறார். இதே கிராமத்தில் எப்படியாவது தன் மனைவியை வெல்ல வைக்க வேண்டும் என்கிற முனைப்பில் எல்லா தகிடு தத்தோம்களையும் செய்பவர் பன்ரகஸ். பன்ரகஸின் மனைவி கிராந்தி தேவிக்கும் எப்படியாவது தலைவராகிவிடவேண்டும் என ஆர்வம். அவரும் லேசுபட்டவர் அல்ல. கணவருக்கு நிகராக உள்ளடி வேலைகளில் ஈடுபடுபவர். மூன்றாவது சீசன் இறுதியில் பிரிஜ் பூஷனை சிலர் சுட, அப்படியே அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியானது. பிரிஜ் பூஷனை சுட்டது யார்; தேர்தல் களேபரங்களில் வெற்றி யாருக்கு என்கிற இரண்டு முக்கிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது பஞ்சாயத்து சீசன் 4.
பஞ்சாயத்து தொடரின் பெரும்பலம் அதன் கதாபாத்திரங்கள். வெள்ளந்தியின் முழு உருவமாக வரும் வினோத். என்ன நடந்தாலும், எல்லோரையும் வாக்குகளாக மட்டும் பார்க்கும் பிரிஜ் பூஷன். ரப்பர் ஸ்டாம்ப் என்றாலும், தனக்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதைப்பற்றியும் யோசிக்காமல் மனதிற்கு பட்டதைச் செய்யும் மஞ்சு தேவி. வாழ்க்கையை நதி போன போக்கில் எடுத்துக்கொள்ளும் விகாஷ் சுக்லா. உப தலைவராக, மகனை இழந்துவாடும் மனதுக்கு பட்டதை சொல்லும் தைரியம் கொண்ட பிரஹலாத். இந்த கிராமத்தில் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்கிற நிலையில் இருந்து நான்கு ஆண்டுகளாக அங்கேயே டென்ட் போட்டு செட்டில் ஆன அபிஷேக் திரிபாதி என தொடரில் பல கதாபாத்திரங்களை அட்டகாசமாக சந்தன் குமார் எழுதியதே இந்தத் தொடரின் வெற்றிக்குக் காரணம். அந்த வகையில் சந்தன் குமார் முழு வெற்றி பெற்றிருக்கிறார். இந்தக் கதாபாத்திரங்களுக்கு அவ்வளவு ஆத்மார்த்தமாக ஜிதேந்திர குமார், ரகுபீர் யாதவ், நீனா குப்தா, ஃபைசல் மாலிக், சந்தன் ராய் முதலியோர் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் இருக்கும் புலேரா என்கிற புனைவு கிராமம் தான் இந்த தொடர் நடக்கும் களம். அடிப்படை வசதிகள் இன்றி இருக்கும் அந்தக் கிராமத்தைச் சுற்றித்தான் கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கும். புனைவு தொடர் என்றாலும், மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் தான் இந்தத் தொடரை ஷூட் செய்திருக்கிறார்கள். நம் கிராமங்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்பதற்கு இந்தத் தொடரைப் பார்த்தாலே போதுமானாது. தமிழில் ரீமேக் செய்யப்பட்ட போது, இந்த தொடர் பெரிய அளவில் கவனம் பெறாததற்குக் காரணமும் இதுதான்.
அமேசான் ப்ரைமில் இந்த வாரம் நான்காவது சீசன் வெளியாகியிருக்கிறது. தாராளமாய் Binge watch செய்யலாம்.