ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் லயன் படத்தில் நடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடிகர் தேவ் படேல் பெயர் இடம்பெற்றுள்ளது.
பயணத்தின் போது பெற்றொரை இழந்துவாடும் இந்தியர் ஒருவரின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ’எ லாங்வே ஹோம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது லயன் திரைப்படம். ஆஸ்திரேலிய தம்பதியினரால் தத்தெடுக்கப்படும் அந்த இந்தியர், கூகுள் மேப் மூலம் இந்தியாவின் குக்கிராமத்தில் வசிக்கும் தனது தாயைத் தேடிக் கண்டுபிடிப்பது போன்ற கதைக்களம் கொண்ட லயன் படத்தினை கார்த் டேவிஸ் இயக்கியிருந்தார். இதில், தேவ் படேலுடன், நவாஜுதின் சித்திக், பிரியங்கா போஸ், நிக்கோல் கேட்மேன், தனிஷ்தா சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஐந்து பேர் கொண்ட ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் தேவ் படேல் இடம்பிடித்துள்ளார். அவருக்குப் போட்டியாக மூன் லைட் படத்தில் நடித்த மஹெர்சாலா அலி, ஹெல் ஆர் ஹை வாட்டர் படத்துக்காக ஜெஃப் பிரிட்ஜஸ், மான்செஸ்டர் பை த சீ படத்துக்காக லூகாஸ் ஹெட்ஜஸ் மற்றும் நாக்டர்னல் அனிமல்ஸ் படத்தில் நடித்த மைக்கேல் ஷானான் ஆகியோர் விருதுக்கான போட்டியில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த படம் உள்பட 14 பிரிவுகளில் ’லாலா லேண்ட்’ படம் இடம் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடக்கும் பிரமாண்ட விழாவில் வரும் பிப்ரவரி 26ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.