ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, கதையின் நாயகனாக நடிக்கும் படம், 'ஒரு கதை சொல்லட்டுமா'. பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா சார்பில் ராஜீவ் பனகல் தயாரிக்கிறார். பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதி இருக்கிறார். ராகுல்ராஜ் இசை அமைத்திருக்கிறார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாம் சென்னையில் நடைபெற்றது. ஏ.ஆர். ரகுமான் வெளியிட இயக்குனர் ஷங்கர் பெற்றார். படத்தின் டீசரை வெளியிட்ட வைரமுத்து பேசும்போது, ’ ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஏ ஆர். ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே, நம் இந்தியாவின் கலை அடையாளங்கள். ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றதோடு நின்று விடாமல், தன் தாய் மண்ணின் கலாசாரம், பண்பாட்டை பற்றிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். இந்தியாவிற்கு தலைநகரம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒருவனுக்கு அவனுடைய கிராமம் தான் தலைநகர். அதை ரசூல் புரிந்து வைத்திருக்கிறார். ஒலி தான் மொழி, சத்தம் எல்லாமே சங்கீதம். ஒலிப்பதிவாளர் என்பவர் ஒலியை பொறுக்குபவர். ரசூல், சவுண்ட் இன்ஜீனியர் அல்ல. அவர் சவுண்ட் டிசைனர். இந்தியாவே இந்த படத்தை கொண்டாடும்’ என்றார் வைரமுத்து.
’கேரளாவின் பூரம் விழாவை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு. இந்தப் படத்தில் அதை நிறைவேற்றியிருக்கிறேன். இந்த பட ரெக்கார்டிங்கின் போது பல இடங்களுக்கு சென்று வந்தேன். பார்வையற்ற ஒருவர் கூட பூரம் திருவிழாவை உணர முடியும்’ என்றார் ரசூல் பூக்குட்டி.
விழாவில் நடிகைகள் லிஸி, ரோகிணி, ரேவதி, குஷ்பூ, ஷோபனா, பூர்ணிமா, ராதிகா சரத்குமார், கனிகா, நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், நாசர், இயக்குனர் கே எஸ் ரவிகுமார் உட்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.