நான்கு மொழிகளில் ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
மலையாளத் திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இதை ஓமர் லுலு இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடலான ‘மணிக்கய மலரே பூவே’ டீசர் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. அந்தப் பாடல் சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய வைரலாக பரவியது. அந்தப் பாடலில் இடம்பெற்ற ப்ரியா வாரியர் ஒரே நாளில் இந்திய அளவில் புகழ்ப் பெற்ற நடிகையாக உச்சத்திற்கு சென்றார். இதுவரை இப்பாடலை யூடியூப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியை தாண்டிவிட்டது “மணிக்கய மலரே பூவே”பாடல் சம்பந்தமாகவும் ப்ரியா வாரியருக்கு எதிராகவும் சிலர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். ப்ரியா வாரியரின் புருவ நடனத்தைக் கண்டவர்கள் அதைபோலவே பல வீடியோக்களை தயாரித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர். மீடியாவின் தலைப்பு செய்தியான ப்ரியா, தமிழில் வாய்ப்புக்கள் வந்தால் நடிக்க விருப்பமாக இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு இருப்பதை உணர்ந்து கொண்ட படக்குழு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இப்படம் வெளியாக உள்ளதாகவும் தகவல் கசிந்து வருகிறது.