ஏன் எளிமையாக இருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் மிக அழகாக பதிலளித்திருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர உள்ள 2.ஓ திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை துபாயில் நடைபெறுகிறது. அதற்காக ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், அக்சய் குமார், எமிஜாக்சன் என பலர் துபாய் சென்றுள்ளனர்.
இன்று அப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்திடம் ஏன் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள்? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், “நிஜ வாழ்க்கையில் நடிக்க சொல்லி யாரும் எனக்கு சம்பளம் தருவதில்லை. ஆகவே நான் மிக எளிமையாக இருக்கிறேன்” என்று பதிலளித்தார். அப்போது பேசிய இயக்குநர் ஷங்கர் “இந்தப் படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை. முதல் பாகத்தின் முடிவிலிருந்து இந்தக் கதையை யாரும் பார்க்க வேண்டாம். இது முற்றிலும் வேறான கதை”என்று கூறினார்.
“இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். அதில் இரண்டு பாடல்களை நாளை வெளியிடுகிறோம். மீதமுள்ள ஒரு பாடல் இந்த வருடத்தின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என்று ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டார். “இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள நான் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து மேலும் ஐந்து படங்களில் நடிக்க வேண்டும்” என்று அக்சய்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவிக்காக ஹெலிகாப்ட்டர், விதவிதமான ரோல்ஸ் ராய்கார்கள் என களைகட்டியுள்ளது துபாய் நகரம். நிகழ்ச்சியை காமெடி நடிகர் ஆர்.ஜே..பாலாஜியும் ராணா டகுபதியும் தொகுத்து வழங்க உள்ளனர். இதை பற்றி ராணா தனது ட்விட்டரில் “இந்திய சினிமா வரலாற்றின் மிகப் பெரிய மோஷன் பிக்ச்சர் நான் தொகுத்து வழங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.