மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும் என்று பிரபல ஹாலிவுட் நடிகரும் டைட்டானிக் படத்தின் கதாநாயகனுமான லியானார்டோ டி காப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிபிசியில் வெளிவந்த சென்னை வறட்சி குறித்த செய்தியை படித்த பின்பு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வாறு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
உலகக் புகழ்ப்பெற்ற "டைட்டானிக்", "தி ரெவனன்ட்" உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் லியானார்டோ டி காப்ரியோ. சிறந்த நடிகருக்காக ஆஸ்கர் விருதினையும் அவர் பெற்றுள்ளார். பிபிசியில் சென்னை குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி படங்களுடன் வெளியாகியிருந்தது, அதனை பார்த்த லியானர்டோ டி காப்ரியோ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் " மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு இருக்கிறது. இந்தியாவின் தென்னகத்து நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன. குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் மணி கணக்காக காத்திருக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. அரசு அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டை போக்க மாற்று வழிகளை தொடர்ந்து யோசித்து வருகின்றனர். ஆனால், சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கின்றனர்" என தெரிவித்துள்ளார்.