சினிமா

‘ஓ மை கடவுளே’ – திரைப் பார்வை

webteam

திருமண உறவு முறியும் கடைசிப் புள்ளியிலிருந்து திரும்பவும் துளிர்க்கும் ஜாலியான காதலே ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்.

அர்ஜூன், அனு, மணி மூவரும் பால்யப் பருவத்தில் இருந்து ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்கள். ஒருகட்டத்தில் அனு, அர்ஜூனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க, அவனும் நண்பி தானே என சரி சொல்லிவிட, எதிர்பாராமல் சந்திக்கும் பள்ளி சீனியர் மீரா அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்னையாய் மாற அதன் பிறகு நடக்கும் கடவுளின் திருவிளையாடல்தான் திரைப்படம்.

அர்ஜூனாக அசோக் செல்வன். ஜாலியான நண்பனாக, கோபப்படும் கணவனாக, தனக்குப் பிடித்த பெண்ணிடம் மருகும் இளைஞனாக என தனக்கு கொடுத்த எல்லா வேலைகளையும் ஜாலியாக செய்திருக்கிறார். என்ன? பெரும்பாலான காட்சிகளுக்கு அவர் கொடுக்கும் ஒரே மாதிரியான ரியாக்‌ஷன்தான் கொஞ்சம் சலிப்பூட்டுகிறது. அவர் நண்பியாகவும் மனைவியாகவும் ரித்திகா சிங் ரசிக்க வைக்கிறார். தன் கணவன், அவன் தோழியிடம் பழகும்போதெல்லாம் வரும் எரிச்சலும், அந்த ‘நூடுல்ஸ் மண்ட’-யும் ரசிக்க வைக்கின்றன.

திரையில் பார்த்ததும் ‘ஓ மை காட்’ என கவர்கிறார் வாணி போஜன். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் அவர் அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் மீரா கதாபாத்திரத்தில். கூடவே, க்யூட்டாக நடிப்பும். ஷாரா படம் முழுக்க வருகிறார். கொஞ்சம் கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார். ’ஓ மை கடவுளே’ படத்தின் சர்ப்ரைஸ் கடவுளாக வருபவர் விஜய் சேதுபதி.

நண்பர்கள், காதல், திருமணம், பிரிவு, கடவுள் என ரசிக்க வைக்கும் களத்தில் கலர்ஃபுல்லாக கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. திருமண உறவின் முக்கியத்துவம், காதலின் அவசியம் போன்றவற்றை இந்த தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலான திரைக்கதையில் பதிவு செய்ததற்கு பாராட்டுகள். முதல் நாள் அலுவலகத்தில் அசோக் செல்வனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, மீராவால் அர்ஜூனுக்கு ஏற்படும் திருப்பம் போல எல்லாக் காட்சிகளுக்கும் மெனக் கெட்டிருந்தால் இன்னும் மனதுக்கு நெருக்கமாகியிருக்கும் திரைப்படம். விதுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். லியோன் ஜேம்ஸ் இசை ஓகே ரகம். ஏற்கனவே கேட்டதுபோலவே இருக்கிறது பின்னணி இசை.

திருமண நேரத்தில் மனம் மாறும் காதலி, விவாகரத்துக்கு முன்பு மனம் மாறும் கணவன் போன்ற தமிழ் சினிமாவின் க்ளிஷேக்களை தவிர்த்திருந்தால் இன்னமும் அழுத்தமாக ரசிக்க வைத்திருக்கும் இந்த ‘ஓ மை கடவுளே’.