இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ’அமரன்’ திரைப்படம், தமிழ் சினிமாத்துறையில் அவருடைய மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது. வசூல் ரீதியிலும் பட்டையை கிளப்பிய இப்படம் 330 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
அமரன் போன்ற ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK25 திரைப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருப்பதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் இன்று வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்குவதாகவும், அதில் ஜெயம்ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் சேர்ந்து நடிக்கவிருப்பதாகவும், படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஜிவிபிரகாஷ் இசையமைக்கவிருப்பதாகவும் படத்தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “எங்களது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் Production No.2-வாக உருவாகும் திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ்த் திரையுலகில் தன் நடிப்பால் மக்கள் மனதில் தனி இடம்பிடித்திருக்கும் திரு. சிவகார்த்திகேயன் அவர்களின் 25வது படமாக "டான் பிக்சர்ஸின் Production No.2" அமைவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளோடு உருவாகும் இந்தத் திரைப்படத்தை தேசிய விருதுபெற்ற இயக்குநர் திருமிகு சுதா கொங்கரா அவர்கள் இயக்குகிறார்.
எப்போதுமே தனித்துவமிக்க கதைகளை தேர்வு செய்திடும் திரு. ஜெயம் ரவி அவர்களும் எங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் திரு. அதர்வா, செல்வி, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு. ரவி கே.சந்திரன் அவர்களும், இசையமைப்பாளராக திரு. ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்களும் பங்களிக்கிறார்கள். குறிப்பாக, திரு. ஜி.வி.பி அவர்களுக்கு இசையமைப்பாளராக இது 100வது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு.
உங்களுக்கு புதிய திரை அனுபவத்தை கொடுக்கும் வகையில் #SK25 நிச்சயம் அமையும் என உறுதியளிக்கிறேன்” என்று தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பதிவிட்டுள்ளார்.
இப்படம் தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸ்க்கு 2வது திரைப்படமாகவும், சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜிவி பிரகாஷ் குமாருக்கு 100வது திரைப்படமாகவும் அமையவிருக்கிறது.
படத்தின் கதையானது இந்தி திணிப்பு எதிர்ப்பை பற்றியது என கூறப்படும் நிலையில், படத்தின் அறிவிப்பிலேயே "வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் இடம்பெற்றுள்ளது.