விஸ்வரூபம்-2 படத்தின் ட்ரெய்லர் வெளியிட காத்திருக்கிறேன் என ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இயக்கி, நடித்த திரைப்படம் விஸ்வரூபம். இது 2013ம் ஆண்டு வெளியானது. அதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் ஆகியோர் நடித்திருந்தனர். முதல்பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர். ஃபஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் அதன்பின் அரசியல் களத்தில் பிஸியாக இருந்த கமல், அண்மையில் விஸ்வரூபம்-2 படத்தின் ட்ரெய்லர் வருகிற 11-ம் தேதி வெளியாகும் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்தி பாகத்தின் ட்ரெய்லரை அமீர்கான் வெளியிடுகிறார். அதேபோல் தமிழ்ப் பாகத்தின் ட்ரெய்லரை ஸ்ருதிஹாசன் வெளியிடுவார் எனவும், தெலுங்கு ட்ரெய்லரை ஜூனியர் என்.டி.ஆர் வெளியிடுவார் எனவும் அதில் கூறியிருந்தார். இந்தநிலையில் தற்போது விஸ்வரூபம்-2 பற்றி ஜூனியர் என்.டி.ஆர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘சற்று நேரத்திற்கு முன்தான் உலகநாயகன் கமல்ஹசனின் விஸ்வரூபம்2 ட்ரைலரை பார்த்தேன். மாலை 5 மணிக்கு ட்ரைலரை வெளியிட காத்திருக்கிறேன். அதுவரை உங்களின் படபடப்பை நிறுத்தி வையுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.