சினிமா

’ஸ்க்விட் கேம்’ தொடரை பென் டிரைவில் ஏற்றி விற்றவருக்கு மரண தண்டனை அளித்த வடகொரியா

sharpana

உலகம் முழுக்க ஓடிடி தளத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்ட ‘ஸ்க்விட் கேம்’ வெப் சீரிஸ் தொடரை பென் டிரைவில் ஏற்றி விற்றதற்காக விற்பனையாளர் ஒருவருக்கு வடகொரியா அரசு மரண தண்டனை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 17 அம் தேதி இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கத்தில் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது தென்கொரிய படைப்பான ‘ஸ்க்விட் கேம்’. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் வெளியான சில தினங்களிலேயே சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றது. யூகிக்கவே முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டால் ‘ட்விட்ஸ்ட் கேம்’ தொடர் என்று சொல்லும் அளவுக்கு பார்வையாளர்களிடம் ஆச்சர்யமூட்டியது. இந்தத் தொடரை தற்போது வரை 13 கோடிக்கும் அதிமானவர்கள் பார்த்துள்ளனர் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

உலகம் முழுக்க ஹிட் அடித்த இத்தொடரை வடகொரியாவில் பென் டிரைவ் மூலம் பதிவேற்றம் செய்து விற்பனை செய்த ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஸ்க்விட் கேம்’ பார்க்க ஆவலுடன் பென் டிரைவை வாங்கிய உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஆசிய செய்திகளுக்கான தனியார் ஊடகமான ரேடியோ ஃப்ரீ ஏசியாவில் செய்தி வெளியாகியுள்ளது.