சினிமா

’எனக்கு அரசியல் தெரியாது’: பாஜக அழைப்பு, மோகன்லால் நிராகரிப்பு!

’எனக்கு அரசியல் தெரியாது’: பாஜக அழைப்பு, மோகன்லால் நிராகரிப்பு!

webteam

’எனக்கு அரசியல் தெரியாது, நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை’ என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மலையாள நடிகர் மோகன்லால் பாஜக சார்பில் போட்டியிட போவதாக தகவல் வெளியானது. அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து கேரள பாஜக பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ் கடந்த சில நாட்களுக்கு முன் கூறும்போது,

மோகன்லால் பாஜக சார்பில் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். அதற்காக கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் எந்த தொகுதியை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயார்’’ என்று கூறியிருந்தார்.

இதனால் அவர் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை மறுத்துள்ளார் மோகன்லால். ‘‘எனக்கு அரசியல் தெரியாது. நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். நடிப்பில் முழு சுதந்திரம் உள்ளது.

ஆனால் அரசியல் அப்படியல்ல. அது எளிதான விஷயமும் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால் அரசியலுக்கு வர விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடவில்லை’’ என்று கூறியுள்ளார்.