மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வின் செயற்குழு கூட்டத்தில், நடிகர் திலீப் விவகாரம் பற்றி இறுதி முடிவு ஏதும் எடுக்காததால், நடிகைகள் அமைப்பினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கேரளாவில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதனால் கேரள நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். 85 நாள்கள் சிறைவாசத் துக்குப் பின் ஜாமினில் வெளியே வந்தார் திலீப். இதையடுத்து ’அம்மா’வுக்கு புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோகன்லால் பொதுக் குழுவைக் கூட்டி, திலீப்பை மீண்டும் சேர்ப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றினார். இந்த முடிவுக்கு ரேவதி, பார்வதி, பத்மப்பிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நடிகைகள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்தும் விலகினர். இதையடுத்து திலீப்பை மீண்டும் சேர்ப்பது பற்றிய தங்கள் முடிவை ’அம்மா’ மாற்றியது. இந்நிலையில் நடிகர் திலீப், ‘நிரபராதி என்று நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைகிறேன்’ என்று கூறினார்.
(பார்வதி, ரேவதி, பத்மப்பிரியா)
திலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர். இரண்டு கடிதங்கள் அனுப்பியும் அதற்கு பதில் வரவில்லை என்று நடிகைகள் கண்டித்து உள்ளனர்.
இதுகுறித்து ரேவதி கூறும்போது, ‘நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா? இல்லையா? என்பதை சங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று விளக்கம் கேட்டோம். இதுவரை பதில் இல்லை. பாலியல் விவகாரங்களில் ஈடுபடும் சங்க உறுப்பினர்களின் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவர்களை நிரந்தரமாக நீக்க சங்க விதியில் திருத்தம் கொண்டு வரும்படி கோரினோம். அதற்கும் இதுவரை பதில் இல்லை’ என்றார்.
திலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் அவரை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவது கடிதம் ஒன்றையும் நடிகைகள் ’அம்மா’வுக்கு அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு குழு கூட்டம் கொச்சியில் நேற்று நடந்தது. இதில் திலீப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. திரைப்படப் பெண்கள் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கை பற்றியும் இதில் பேசவில்லை என்று கூறப்படுகிறது.
‘நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டரீதியான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அது தெரிய வந்ததும் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகளுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும். பொதுக்குழு கூடும் வரை அவர்கள் அமைதிகாக்க வேண்டும்’ என்று ’அம்மா’ செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.