சினிமா

உடல் எடையை குறைத்து பழைய தோற்றத்துக்கு திரும்பிய நிவின் பாலி - வைரலாகும் புகைப்படங்கள்!

சங்கீதா

உடல் எடைக் கூடி சில காலங்களாக காணப்பட்ட மலையாள நடிகர் நிவின் பாலி, தற்போது உடல் இளைத்து பழைய தோற்றத்தில் வலம் வரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மலையாள திரையுலகின் முன்னணி நடிரான நிவின் பாலி, ‘Malarvaadi Arts Club’ என்றப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘தி மெட்ரோ’, ‘தட்டத்தின் மரையத்து’, ‘புதிய தீரங்கள்’, ‘1983’, ‘பெங்களூரு டேஸ்’, ‘இவ்டே’ உள்பட பலப் படங்களில் நடித்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இவரது நடிப்பில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியான ‘நேரம்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இவர்கள் கூட்டணியில் உருவான ‘பிரேமம்’ திரைப்படம் தென்னிந்திய அளவில் இளைஞர்களிடையே மிகப் பெரிய ஹிட்டடித்தது.

இந்நிலையில், திடீரென நிவின் பாலி உடல் எடைக் கூடி காணப்பட்டார். பல்வேறு திரைவிழா நிகழ்ச்சிகளிலும் அதிக உடல் எடையுடன் இருக்கும் தோற்றத்துடனே கலந்து கொண்டார். இது அவரது ரசிகர்களை பெரிதளவில் ஏமாற்றம் அடைய செய்தது. இதனால் நிவின் பாலி கடும் விமர்சனத்திற்கு ஆளான நிலையிலும், சிலப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அந்தப் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது உடல் இளைத்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு நிவின் பாலி திரும்பியுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையங்களில் வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். தமிழ் திரையுலகில், சிம்பு உடல் எடைக் கூடி, பின்னர் உடல் இளைத்து நடித்தப் படங்கள் எல்லாம் ஹிட்டாகி வருகின்றன. இதேபோன்று நிவின் பாலி தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் நடிகர் நிவின் பாலி தற்போது இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.