‘சில்லுக் கருப்பட்டி’ படத்தில் இளம் காதல் ஜோடியாக நடித்த நடிகை நிவேதிதா சதீஷ், நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்துள்ளார்.
சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குநர் இயக்கத்தில், கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சில்லு கருப்பட்டி’. இந்தப் படத்தில் சிறுவயது, இளம் வயது, நடுத்தர வயது மற்றும் முதிய வயது ஆகிய 4 பருவக் காதல் காட்சிகள் அமைந்த கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இதில் இளம் பருவக் காதல் காட்சிகளில் மணிகண்டன் மற்றும் நிவேதிதா சதீஷ் நடித்திருப்பார்கள். இதில் மணிகண்டனின் உடல்ரீதியான பிரச்னைக்கு மிகவும் நம்பிக்கை கொடுப்பவராக நிவேதிதா சதீஷ் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பார். மேலும், 2017-ம் ஆண்டு வெளியான ‘மகளிர் மட்டும்’, ‘உடன் பிறப்பே’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நிவேதிதா சதீஷ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு ஒவ்வொரு நாளாக வெளியிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சந்தீப் கிஷன், நேற்று பிரியங்கா அருள் மோகன், இன்று நிவேதிதா சதீஷ் ஆகியோர் படத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சாணிக்காயிதம்’ பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை பீரியட் படமாக இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசைமையக்க உள்ளார்.