நிதீஷ் பரத்வாஜ்  nitishbharadwaj / ramayana part 1
சினிமா

‘ராமாயணா பார்ட் 1’ ஒரு அஜெண்டா படம்.. சாபம் வாங்கிய ராவணன் நல்லவனா? எழுந்த விமர்சனம்!

சமீபத்தில் 200 கோடி பொருட்செலவில் வெளியான ராமாயணா பகுதி 1 திரைப்படத்தை தொலைகாட்சியில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற நிதீஷ் பரத்வாஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Rishan Vengai

ராமாயணா பகுதி 1 திரைப்படம் இராமாயணத்தின் தார்மீகக் கட்டமைப்பை மாற்றி, ராவணனை தாராள மனப்பான்மை கொண்டவராக சித்தரிக்கிறது என நிதீஷ் பரத்வாஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய பாரம்பரியத்தை தவறாக சித்தரிக்கும்வகையில் இப்படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியற்றது என அவர் கூறியுள்ளார்.

நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'ராமாயணம்: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்'. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமராகவும் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஸிம்மர் இருவரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். தீபாவளியையொட்டி 5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம், 16 நாட்களில் 1500 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதித்துள்ளது.

Ramayana

இந்தசூழலில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராமாயணா பகுதி 1 படத்தை ஒரு அஜெண்டா படம் என்றும், அதன் நிதி ஆதாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தொலைக்காட்சியில் மகாபாரத தொடரின் ‘கிருஷ்ணராக’ நடித்து புகழ்பெற்ற நிதீஷ் பரத்வாஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலில் ராமாயணா படத்தின் ட்ரெய்லரை பார்த்து இப்படம் ஆஸ்கார் விருதுபெறும் என்று புகழ்ந்திருந்த அவர், அவருடைய பாராட்டை தற்போது திரும்பப் பெற்றுள்ளார்.

படத்தை கடுமையாக விமர்சித்திருக்கும் அவர், “இராவணனை விதிவிலக்காக தாராள மனப்பான்மை கொண்ட, சமூக நீதி மற்றும் நேர்மை மிக்க ஒருவராகக் காட்டுவதன் மூலம், என் பார்வையில். இத்திரைப்படம் இராமாயணத்தின் தார்மீகக் கட்டமைப்பை மாற்றி, அவதாரத்தின் நோக்கத்தையே சிதைக்கிறது. ராவணன் சீதா பிராட்டியிடம் கண்ணியமாக நடந்துகொண்டது அவன் வாங்கிய சாபத்தினால் தானே தவிர, நல்ல பண்பால் அல்ல. இப்படத்தில் ராவணனின் எதிர்மறையான அம்சங்கள் சிறிதும் காட்டப்படவில்லை, ஒரு மார்க்சிய கம்யூனிஸ்ட் தலைவரைப் போல காட்டப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

மேலும் ராவணனை அழிக்க எந்தக்காரணத்திற்கு ராமர் அவதாரம் எடுத்தாரோ அதுவே இப்படத்தில் முரணாகியுள்ளது என்றும், ராமரை சாதாரண மனிதராக, உணர்வுகளற்ற ஒருவராக சித்தரிப்பதாகவும், என் கருத்துப்படி. இந்தப் படத்தின் கதை பாரதத்தின் வரலாறு. பாரம்பரியம் மற்றும் அடிப்படை ஆன்மீக விழுமியங்களைத் தவறாகச் சித்தரிக்கும்வகையில் இருப்பதால், இது சர்வதேச அளவில் இந்திய சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதியற்றது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.