சினிமா

’தி ஐயன் லேடி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

webteam

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ‘தி ஐயன் லேடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படத்தை இயக்க உள்ள ப்ரியதர்ஷினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.

75 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி 2016-ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி அவர் காலமானார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இவரின் மறைவுக்கு பிறகு இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பல இயக்குநர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இயக்குநர் மிஷ்கினுடன் இணை இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் இயக்க உள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24, 2019 ல் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் ‘தி ஐயன் லேடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ப்ரியதர்ஷினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நித்யா மேனன் அடையாளம் தெரியாத அளவுக்கு ஜெயலலிதாவாக மாறியுள்ளார்.