சினிமா

“ஊரடங்கு முடிந்ததும் இயந்திர வாழ்க்கைதான்” - நித்யா மேனன் டயரி குறிப்புகள் 

webteam
புதிய இசை, புதிய மொழி, புதிய பாடல்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தனது தனிமை நாட்கள் குறித்து நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க கொரோனா நோய் பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் முழுக்க மூடப்பட்டுள்ளன. பேருந்து மற்றும் ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உலகம் இதுவரைக் கண்டிராத ஆபத்தான சூழல் நிலவி வருகிறது. கொரோனாவினால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருகின்றன.   
மக்கள் ஒட்டுமொத்தமாக முடங்கிக் கிடக்கும் இந்தத் தருணத்தை நினைத்து பெரிதும் கவலையில் உள்ளனர். ஆனால் இந்தத் தருணத்தை மிக இயல்பாக எப்படி கடக்க வேண்டும் எனத் தனது டயரி குறிப்புகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நடிகை நித்யா மேனன்.  சமீபத்தில் வெளியான இவரது‘சைக்கோ’ படத்தில் மிகத் திறமையான ஆற்றலை வெளிப்படுத்தியிருந்த அவர், இந்த நெருக்கடியை எதிர்கொண்டு சமாளித்து முன்னேறுவது சம்பந்தமாக எழுதியுள்ளார்.
அவரது பதிவில், “ஊரடங்கும் என்பது சற்றும் எதிர்பாராத விதமாக எங்கள் மீது விழுந்தது.  ஆனால் நாம் ஒரு பயங்கரமான சூழ்நிலைக்குள் உள்ளதாக நான் நினைக்கவில்லை. ஒரு தொற்று நோய் நம் வாழ்நாளில் உலகைப் பிடித்து ஆட்டும் என்று நாம் யாரும் கற்பனை செய்திருக்க மாட்டோம். இப்போது வரை, இது இலக்கியம் மற்றும் சினிமாவிற்கான கருப்பொருள். எனவே, இந்தத் தருணத்தை உண்மையில் படைப்பாற்றலுக்கான தூண்டுகோளாக ஏன் கருதக் கூடாது? 
ஊரடங்குக்குப் பிறகு நான் கவனித்த முதல் விஷயம், அமைதி. இந்த அமைதி என்னை எழுதத் தூண்டியது. நான் என் மனதில்  நீண்ட காலமாக  ஸ்கிரிப்ட் மற்றும் கதைக்கான யோசனைகளைச் சேமித்து வைத்திருந்தேன்.  இதுவரை நான் அதைப் பெறுவது கடினமாக இருந்தது.  ஏனென்றால் என் வேலை முழுக்க என் நேரத்தை எடுத்துக் கொண்டது. 
இப்போது, சூழ்நிலை என்னை சுதந்திரமாக உணர வைக்கிறது. ஒரு புதிய மொழி, புதிய இசை மற்றும் பாடல்களைக் கற்று  நான் கொண்டிருக்கிறேன். மேலும் ஒவ்வொரு நாளும் யோகா செய்கிறேன்.  அழகான படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆர்.கே. நாராயணின் மால்குடி டேஸ் பக்கங்களுக்கு இடையில் சில ஏக்கம்.  இது ஒரு நல்ல நேரம் போல் தெரிகிறது. ஊரடங்கு முடிந்தவுடன் நாம் எங்கள் வழக்கமான, இயந்திர வாழ்க்கை முறைக்குச் செல்வோம்; ஆகவே இதை நாம் தவறவிடக்கூடும். நாம் ஊரடங்கு நிலையில் இருப்பதற்கு நன்றி. நிறைய உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் இறுதியாகச் சுதந்திரமாகச் சுவாசிக்க முடியும்”எனக் கூறியுள்ளார்.