சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே. படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, பாலா சிங், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியானது. டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், என்.ஜி.கே படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஒரு அரசியல் படத்திற்கே உண்டான தன்மையில் டிரெய்லர் அமைந்துள்ளது. தொடக்கம் முதல் இறுதிவரை அனைத்தும் அரசியல் தொடர்பான காட்சிகளே. டிரெய்லரில் வசனமும், இசையும் சிறப்பாக உள்ளது. ‘உண்மையிலே நம்முடைய சுதந்திரம் பிரிட்டீஷ்காரர்களிடம் இருந்து வாங்கி அரசியல்வாதிகளிடம் கொடுத்திருக்கோம்’ என அசத்தலாக வசனம் பேசியுள்ளார் சாய் பல்லவி. டீசரில் கூட ‘குமரா போடா கண்ணா.. நீ இறங்குனா சாக்கடை கூட சுத்தமாகிடும்..’ என்ற வசனத்தை அவர் பேசியிருந்தார்.
அதேபோல், டிரெய்லரில், ‘இப்படி படிச்ச பசங்கெல்லாம் வேணாம்னு ஓடி ஓடிதான்யா நம்ம நாடே நாசமா போச்சு’ ‘எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதன் ஆணிவேரில் இருந்து ஆரம்பிக்கிறதுதான் அழகு’, ‘உழுது பூமியில ரத்தம் சிந்தி, அரிசி அனுப்புற ஒவ்வொரு ஜீவனுக்கும், இந்த நாடு நல்லா இருக்கணும்னு உழைக்கிற தொழிலாளர்களுக்கும், எல்லாவற்றையும் தட்டிக் கேட்கிற உரிமை இருக்கு’ உள்ளிட்ட வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
என்.ஜி.கே படம் மே 31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.