நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 39 -ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 2,05,000 ரூபாய் பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர் களுக்காக ’தாய்தமிழ் பள்ளிக்கு’ ஒரு லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை இயக்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:
அகரம் பவுண்டேஷன் இப்படியொரு நிலைக்கு வரும் என எதிர்பார்க்கவில்லை. 2500 மாணவர்களுடன் இந்தாண்டு தொடர்கிறது. கல்வியில் எங்கோ பின் தங்கிட்டோமோ, கல்வித்தரம் சரியா இல்லையோ என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லாத் தையும் தாண்டி, நான் படித்தே தீருவேன், ஆகியே தீருவேன் என்ற வைராக்கியமிருந்தால் எதுவுமே தடை கிடையாது. இதுக்கு உதாரணமாக நம்முன் பலர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைந்தே தீருவேன் என்று நினைத்தால் நிச்சயமாக அந்த இலக்கை அடைந் தே தீருவீர்கள்.
நான் இந்த மேடையிலிருக்கும் அளவுக்கு வளர்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. 1997-ல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பாவின் ஆசிர்வாதத்தால் நானும் நடிகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறேன். எனது ஆரம்ப இடத்தை யோசித்துப் பார்த்தால், எப்படி இந்த இடத் துக்கு வந்தேன் என்று பயமாக இருக்கிறது.
அந்த இடத்தைத் தாண்டி, அகரம் மூலமாக செய்து வரும் உதவிகளை உயர்வாகப் பார்க்கிறேன். நடிகராகப் பார்ப்பதை விட, அகரம் மூலம் ஏதோ செஞ்சுட்டு இருக்கேன் என்பதை பல மடங்கு உயர்வாக பார்க்கிறேன். அகரம் மூலமாக செய்ய வேண்டியது கடல் அளவுக்கு இருக்கிறது. அதை செய்வதற்கு யாரை எல்லாம் பார்க்க வேண்டுமோ, எந்த கதவுகளை எல்லாம் தட்ட வேண்டுமோ அனைத்துமே தட்டப்படும்.
இவ்வாறு சூர்யா பேசினார்.