சினிமா

மீண்டும் ஜெய்யுடன் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா -வெளியான அறிவிப்பு; வாழ்த்து தெரிவித்த ரஜினி

மீண்டும் ஜெய்யுடன் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா -வெளியான அறிவிப்பு; வாழ்த்து தெரிவித்த ரஜினி

சங்கீதா

நயன்தாரா - ஜெய் கூட்டணியில் புதியப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவரான நயன்தாரா கடைசியாக ஓடிடியில் வெளியான ‘ஓ2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில் தனது நீண்ட நாள் காதலரும், இயக்குநரான விக்னேஷ் சிவனை கடந்த மாதம் 9-ம் தேதி கரம் பிடித்தார். அதன்பின்பு சற்று இடைவெளி எடுத்துக்கொண்ட நயன்தாரா, தற்போது அட்லீயின் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில், நயன்தாராவின் 75-வது பட அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரைப்படத்தை புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இயக்குநர் ஷங்கருக்கு துணை இயக்குநராக பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது. ‘ராஜா ராணி’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில், நடிகை நயன்தாரா, ஜெய் மற்றும் சத்யராஜூடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

மேலும் 'நயன்தாரா 75' படத்தின் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவை தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். இது தொடர்பாக நிலேஷ் கிருஷ்ணா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நிஜமாகவே என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நாள். நான் அறிமுகமாகும் முதல் படமான 'நயன்தாரா 75' படத்தின் பூஜை சூப்பர் ஸ்டாரின் அழைப்பிலிருந்து ஆரம்பித்தது. அவர் ஆசீர்வதித்தார், வாழ்த்தினார். இதை விட வேற என்ன வேண்டும். லவ் யூ தலைவா" என குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.