நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, யோகிபாபு, சரண்யா உட்பட பலர் நடித்துள்ள படம், ’கோலமாவு கோகிலா’. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் குடும்ப வறுமையை போக்க போதை பொருள் கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார். டார்க் காமெடியுடன் கூடிய த்ரில்லர் படமான இதில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிப்பவராக யோகி பாபு நடித்துள்ளார்.
அனிருத் இசையில் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், ’கல்யாண வயசுதான் வந்திடுச்சுடி’ பாடல் ஆன்லைனில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. நயன்தாராவும் யோகிபாபுவும் பங்குபெறும் இந்தப் பாடலின் வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் ‘கோலமாவு கோகிலா’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 திரைப்படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கமல்ஹாசனுக்கு போட்டியாக நயன்தாராவின் கோலமாவு கோகிலாவும் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.