சினிமா

'கொரோனா அனுபவம்... அவரின் அன்பு புரிகிறது'- மீண்டும் இல்லற வாழ்வில் நவாஸுதீன் தம்பதி!

'கொரோனா அனுபவம்... அவரின் அன்பு புரிகிறது'- மீண்டும் இல்லற வாழ்வில் நவாஸுதீன் தம்பதி!

webteam

பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், கடந்த ஆண்டு அவரது மனைவி ஆலியா விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பியபோது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். விவாகரத்து கேட்டதோடு நிற்காமல் நவாஸுதீன் சித்திக் மற்றும் அவரது சகோதரர் இருவர் மீதும் பல குற்றச்சாட்டுகளை சுமத்தி அதிர்ச்சி கொடுத்திருந்தார் ஆலியா. இந்த சம்பவம் அப்போது பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையே, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஒரு வருடத்தில் நவாஸுதீன் சித்திக் - மனைவி ஆலியா இருவரும் தங்கள் முடிவை மாற்றி கொண்டுள்ளனர். மீண்டும் இல்லற வாழ்க்கையில் ஒன்றாக பயணிக்க இருக்கின்றனர்.

இதை சாத்தியப்படுத்தியது கொரோனா வைரஸும், அவர்களின் குழந்தைகளும்தான். சில நாட்களுக்கு முன் ஆலியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாக, அந்த சமயத்தில் கடுமையான பணிச் சூழலில் இருந்த நவாஸுதீன், அதற்கு மத்தியில் குழந்தைகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு அவர்களை கவனித்து கொண்டதுடன், ஆலியாவையும் போனில் நலம் விசாரிப்பது என அன்பாக நடந்துகொண்டிருக்கிறார். இதற்கு முன் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத, நவாஸின் அன்பு மீண்டும் அவர்களை ஒன்றிணைத்துள்ளது. இதையடுத்துதான் இருவரும் மீண்டும் இணைய இருக்கின்றனர்.

இது தொடர்பாக ETimes-க்கு பேசியுள்ள ஆலியா, ``குழந்தைகள் காரணமாக, நாங்கள் இருவரும் மறுபரிசீலனை செய்கிறோம். குழந்தைகள் பெற்றோர் இருவரின் அன்பையும் பெற வேண்டும், அவர்களும் வளர்ந்து வருகிறார்கள். ஷோரா தனது தந்தையுடன் மிகவும் இணைந்திருக்கிறார், அவளுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகவும் கடினம். நாங்கள் அவளிடம் எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவள் பின்னர் தெரிந்துகொண்டாள். அவர் வருத்தமாக இருந்தார், அது அவரது படிப்புகளையும் பாதித்தது.

லக்னோவில் படப்பிடிப்பு நடந்து வருவதால், குழந்தைகள் ஷோராவும் யானியும் தற்போது நவாஸுதீனுடன் தங்கியுள்ளனர். கொரோனா உறுதியானதும் நான் நவாஸை அழைத்தேன், அவர் என்னை நேர்மறையாக அணுகினார். அவர் உடனடியாக குழந்தைகளை அழைத்துக்கொள்ள தனது மேலாளரை அனுப்பினார், இப்போது அவர் அவர்களை கவனித்து வருகிறார்.

முதல் தடவையாக எனக்கு இவ்வளவு பெரிய நோய் ஏற்பட்டது. இதன்காரணமாக நவாஸின் வேறு பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அவர் குழந்தைகளை நிர்வகிக்கும் அதேவேளையில், அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். நான் முதல் படி எடுத்து, எங்கள் பிரச்சினைகளைப் பற்றி நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னேன், அவரும் அவ்வாறே உணர்ந்தார். நாங்கள் ஒருவருக்கொருவர் பேசினோம், விஷயங்களை முன்னோக்கி கொண்டு சென்றோம். நாங்கள் இருவரும் எங்கள் உறவை மேம்படுத்துவதற்காக செயல்படுவதால் நான் நேர்மறையாக இருக்கிறேன். அவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

நவாஸின் அன்பு எனக்குப் புரிகிறது. அவர் குழந்தைகளையும் என்னையும் நன்றாக கவனித்து வருகிறார், எனவே அவர் தனது மனைவியை மதிக்கிறார் என்று என்னால் உணர முடிகிறது. நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்றை அனுபவிக்கிறேன். மாற்றம் நல்லது, நாம் இரண்டாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும். சிக்கல்கள் உள்ளன, ஆனால் காதல் உள்ளது. நான் 16 ஆண்டுகளாக அவருடன் இருந்திருக்கிறேன்" என்று மனம் விட்டு பேசியிருக்கிறார்.