சினிமா

இந்தியில் "ஒத்த செருப்பு" - பார்த்திபன் கதாபாத்திரத்தில் நவாஸுதீன் சித்திக்

jagadeesh

பார்த்திபன் இயக்கத்தில் தமிழில் வெளியான "ஒத்த செருப்பு" படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நவாஸூதின் சித்திக் நடிக்கவிருக்கிறார். இந்தத் தகவலை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பார்த்திபன் இயக்கத்தில் உருவான படம் 'ஒத்த செருப்பு'. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து இந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்திருந்தார். இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத இந்த முயற்சிக்கு சர்வதேச அரங்கில் பல்வேறு அங்கீகாரங்கள் கிடைக்கும் என ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் எதிர்பார்ப்போடு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இதனால், இந்த ஆண்டுக்கான இந்தியாவின் ஆஸ்கர் விருது பரிந்துரையில் ஒத்த செருப்பு திரைப்படம் நிச்சயம் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுக்கான இந்திய பரிந்துரையில் 'gully boy' திரைப்படம் இடம்பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வந்தனர். ஆனால் இப்போது இதே படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

அத்துடன் பார்த்திபன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது....தயாரிப்பாளர்களில் ஒருவரான ரமேஷ் உடன்” என பதிவிட்டுள்ளார். நவாஸுதீன் மற்றும் தயாரிப்பாளர் உடனான படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே ஜனவரி 1 ஆம் தேதி தன்னுடைய அடுத்தப் படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். படத்துக்கு "இரவின் நிழல்" என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளார்.