இயக்குநர் சுந்தர்.சி மீது திரைத்துறையை சேர்ந்த ஒருவர் 50 லட்சம் ரூபாய் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் பல்வேறு படங்களுக்கு கதை,வசனம் எழுதி வருகிறார். இந்நிலையில் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஒளிப்பரப்பாகும் நந்தினி என்ற நொடுந்தொடரின் கதை தன்னுடையது எனவும் அந்தக் கதையை கொடுத்தால் அதற்காக ரூ 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் சுந்தர்.சி வாக்களித்தார். எனவே அதை நம்பி கதையை அவரிடம் கொடுத்தேன். அவர் அதற்கு ஈடாக நான்கு லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு மீதி பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார் என்று தெரிவித்துள்ளார். எனவே தனக்கும், தனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு தருமாறும் இந்தப் பிரச்னையில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் வேல்முருகன் அந்தப் புகார் மனுவில் கேட்டு கொண்டுள்ளார்.