பாலியல் புகார் காரணமாக இந்திப் படத்தில் இருந்து விலகிய நானா படேகருக்கு பதிலாக, அந்தப் படத்தில் ராணா நடிக்கிறார்.
தமிழில், ’பொம்மலாட்டம்’, ரஜினியின் ’காலா’ படங்களில் நடித்தவர், நானா படேகர். இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இதையடுத்து இந்தி திரையுலகை சேர்ந்த பலர் அந்த நடிகைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்களை வெளிப்படையாக கூறத் தொடங்கினர். இந்நிலையில் நடிகை கங்கனா, ’குயின்’ இயக்குனர் விகாஸ் மீது பாலியல் புகார் கூறினார். இதுவும் பரபரப்பானது.
இந்த பாலியல் புகாரை மறுத்த நானா படேகர் அந்த நடிகை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த நடிகையும் நானா படேகார் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் ’ஹவுஸ்புல் 4’ படத்தின் இயக்குனர் சஜித்கான் மீது நடிகை ராச்சல் வொயிட், உதவி இயக்குனர் சலோனி சோப்ரா, பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய் ஆகியோர் பாலியல் புகார்களை கூறியிருந்தனர். இதை கேள்விப்பட்ட அக்ஷய்குமார், அந்தப் படத்தின் ஷூட்டிங்கை கேன்சல் செய்தார்.
இதுபற்றி அக்ஷய்குமார் கூறும்போது, ‘மீடியாவில் வந்துள்ள பாலியல் செய்திகள் அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் தயாரிப்பாளர்களிடம், ஷூட்டிங்கை கேன்சல் செய்யுமாறு கோரிக்கை வைத்துவிட்டேன். விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்தப் படத்தில் இருந்து இயக்குனர் சஜித் கான் விலகினார். ‘என் மீது கூறப்பட்டுள்ள புகார் காரணமாக என் குடும்பத்தினர், என் தயாரிப்பாளர், நான் இயக்கும் ’ஹவுஸ்புல் 4’ படக் குழுவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் படத்தை இயக்குவதில் இருந்து விலகிக் கொள்கிறேன். என் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தையும் மறுக்கிறேன்’ என்று அவர் தெரிவித்தார்.
(பூஜா ஹெக்டே)
இவரைத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நடிகர் நானா படேகரும் படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில் நானா படேகர் கேரக்டரில் நடிக்க நடிகர் ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காமெடி படமான இதில் அவர், கஜல் பாடகராக நடிக்கிறார். அடுத்த வாரம் மும்பையில் ஷூட்டிங் நடக்கிறது.
(கீர்த்தி சனான்)
இதுபற்றி ராணா கூறும்போது, ‘தெலுங்கு தவிர மற்ற மொழியில் நடிப்பது பெரிய அனுபவம். அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் படத்தில் நடிப்பதை ஆவலோடு எதிர்பார்க்கி றேன். அக்ஷய்குமாருடன் ஏற்கனவே பேபி என்ற இந்தி படத்தில் நடித்திருந்தேன். இப்போது அவருடன் மீண்டும் நடிக்கிறேன்’ என்றார்.
இந்தப் படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், பாபி தியோல், கிரித்தி சனான், பூனா ஹெக்டே உட்பட பலர் நடிக்கின்றனர்.