பாலியல் புகாரில் சிக்கிய இந்தி நடிகர் நானா படேகர், இயக்குனர் சஜித் கான் ஆகியோர் ’ஹவுஸ்புல் 4’ படத்தில் இருந்து விலகியுள்ளனர்.
பிரபல இந்தி பட ஹீரோ அக்ஷய்குமார். இவர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்தி திரையுலகை சேர்ந்தவர் பலர் தனுஸ்ரீ-க்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் அக்ஷய்குமார் மனைவி டிவிங்கிள் கண்ணாவும் ஒருவர். அதைக் கண்ட தனுஸ்ரீ, ’நீங்கள் எனக்கு ஆதரவு தருகிறீர்கள். ஆனால், உங்கள் கணவர் அக்ஷய்குமார், ’ஹவுஸ்புல் 4’ படத்தில் நானா படேகருடன் நடித்து வருகிறார். இது என்ன நியாயம்? நானாவை புறக்கணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை கங்கனா, ’குயின்’ இயக்குனர் விகாஸ் மீது பாலியல் புகார் கூறினார். இது பரபரப்பானது.
(ஹவுஸ்புல் 4 டீம் ஒரு விருந்தில்...)
பாலியல் புகார்களை எல்லோரும் வெளியே கூறத் தொடங்கிய நிலையில், இந்திய ’மீ டு ஹேஷ்டேக்’ பிரபலமாகி வருகிறது. இந்தி பட இயக்குனர் சுபாஷ் கய் மற்றும் பிரபல நடிகர்கள் மீதும் நித்தம் பாலியல் புகார் வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார். அவர் மீது மேலும் சில பெண்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அக்ஷய் குமார் நடிக்கும் ’ஹவுஸ்புல் 4’ படத்தின் இயக்குனர் சஜித்கான் மீது நடிகை ராச்சல் வொயிட், உதவி இயக்குனர் சலோனி சோப்ரா, பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய் ஆகியோர் பாலியல் புகார்களை கூறியிருந்தனர். இதை கேள்விப்பட்ட அக்ஷய்குமார் நேற்று நடக்க இருந்த அந்தப் படத்தின் ஷூட்டிங்கை கேன்சல் செய்தார்.
இதுபற்றி அக்ஷய்குமார் கூறும்போது, ‘இத்தாலியில் இருந்து இப்போதுதான் இந்தியா திரும்பினேன். மீடியாவில் வந்துள்ள பாலியல் செய்திகள் அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் தயாரிப்பாளர்களிடம், ஷூட்டிங்கை கேன்சல் செய்யுமாறு கோரிக்கை வைத்துவிட்டேன். விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்தார்.
(சஜித் கான்)
இதையடுத்து இந்தப் படத்தில் இருந்து இயக்குனர் சஜித் கான் விலகியுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, ‘என் மீது கூறப்பட்டுள்ள புகார் காரணமாக என் குடும்பத்தினர், என் தயாரிப்பாளர், நான் இயக்கும் ஹவுஸ்புல் 4 படக் குழுவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இதற்கு பொறுப்பேற்று இந்தப் படத்தை இயக்குவதில் இருந்து விலகிக் கொள்கிறேன். என் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தையும் மறுக்கிறேன். உண்மை வெளிவருவதற்குள் நீங்களே தீர்ப்பெழுதி விடாதீர்கள் என்று மீடியா மற்றும் நண்பர்களிடம் கேட்டுகொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நடிகர் நானா படேகரும் இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
இந்த விவகாரம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.