தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்தைப் பாராட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் (90). ஏழுவயது முதலே மேடை நாடகங்களில் நடித்தவர், அண்ணாதுரை கதையில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கி என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த `நல்லதம்பி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1950களுக்கு பிறகு ஹீரோயினாக நடிக்க துவங்கியவர் 1960களின் இறுதி வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தார். எம் ஜி ஆர்., சிவாஜி உட்பட முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார் ராஜம்.
அவர் நடித்த பல படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தைப் பெற்றவை. `ரத்தக்கண்ணீர்', `நாடோடி மன்னன்', `பாசமலர்', `அலிபாபாவும் 40 திருடர்களும்', `அரங்கேற்றம்' போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்களில் சில. கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து விலகும் முன் விஜய் நடித்த `திருப்பாச்சி', வடிவேலுவின் `இம்சை அரசன் 23ஆம் புலிகேசி', அர்ஜுனின் `மருதமலை' போன்ற படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் 90வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவரை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்பை பாராட்ட முடிவெடுத்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.
அதன் பொருட்டு வரும் 21ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், எம்.என்.ராஜத்திற்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியும் துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகனும் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.