மிஷ்கின் இயக்கத்தில் கண் பார்வை இழந்த மாற்றுத்திறனாளியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மிஸ்கின். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதன்படி திரைப்படங்களை இயக்கி வருகிறார் அவர். சித்திரம் பேசுதடி தொடங்கி கடைசியாக வெளியான துப்பறிவாளன் வரை அவரது அனைத்து படங்களிலும் வரும் கதாபாத்திரங்கள் இயல்புக்கு மீறிய தன்மையில் ஒருவித ஒருமித்த நடிப்பு பாணியில் இருக்கும்.
"துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் அடுத்ததாக இயக்கியுள்ள படம் 'சைக்கோ'. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அதிதிராவ் ஹைதரி, நித்யா மேனன், இயக்குநர் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அங்குலிமாலா பற்றிய புகழ்பெற்ற புத்தமத கதையை தழுவி 'சைக்கோ' படம் உருகிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. 'சைக்கோ' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ட்ரெய்லரும் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் உள்ளது.
டீசரைப் போல் ட்ரெய்லரிலும் எவ்வித வசனங்களும் இல்லை. வெறும் பின்னணி இசை மட்டுமே இடம்பெற்றுள்ளது. வழக்கம்போல், மிஸ்கின் படத்திற்கே உண்டான பாணியிலான காட்சி அமைப்புகள் மற்றும் கதாபாத்திர உடல் மொழிகள் இதில் அப்படியே தெரிகிறது. இது ஒரு க்ரைம் கதை என்று டீசர் மற்றும் ட்ரெய்லரை பார்க்கும் போது நன்றாக தெரிகிறது. யுத்தம் செய் படத்தில் சேரன் செய்தது போன்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் இயக்குநர் ராம் செய்வது போல் உள்ளது.
வழக்கமாக மிஸ்கின் படங்களில் நெகடிவ் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார். துப்பறிவாளன் படத்தில் வினய், முகமூடி படத்தில் நரேன், அஞ்சாதே படத்தில் பிரசன்னா ஆகியோர் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் ஜித்தன் ரமேஷ் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகனாக வரும் உதயநிதி மிகவும் இயல்பாக தெரிகிறார்.
ட்ரெய்லரில் பின்னணி இசையாக பீத்தோவனின் பியானோ இசையை இளையராஜா பயன்படுத்தி இருக்கிறார். இது காட்சிகளுக்கு ஏற்ப நன்றாகவே பொருந்துகிறது. ட்ரெய்லரில் வரும் காட்சிகள் ஆங்கிலத்தில் வெளியான 'saw' படத்தினை நினைவூட்டுகிறது. ரத்தம் தெறிக்கும் காட்சிகள் கொஞ்சம் உருத்தலாக இருக்கிறது. மொத்தத்தில், மிஷ்கினின் பழைய படங்களின் பாணி அதிகம் இருந்தாலும், இந்த ட்ரெய்லர் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.