இந்திய சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் பார்வதி. தற்போது இவர் அஜித் பால் இயக்கத்தில் STROM என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த சீரிஸ் தொடர்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்பேட்டியில் ஆரம்பத்தில் தனக்கு காதல் கதைகள் மட்டுமே வந்தது குறித்தும், அதை எப்படி எதிர்கொண்டார் என்பது குறித்தும் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் "நான் நடிக்க வந்த முதல் 7 வருடங்களில் எனக்கு வந்ததெல்லாம் காதல் கதைகளே. காதல் கொள்வது, காதலில் இருந்து வெளியேறுவது, காதலை தேடி செல்வது, காதலுக்கு காத்திருப்பது என எல்லாம் காதலை சுற்றியே அமைந்தது. எனக்கு அப்படி நடித்து நடித்து சோர்வாகிவிட்டது. பெண்களுக்கு காதலை தவிர வேறு எந்த வேலையுமே இருக்காதா? ஒருவேளை நான் அப்படியே நடித்துக் கொண்டிருந்தால் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்வதாக தான் இருந்திருக்கும்.
அதன் பிறகு தான் கதாபாத்திரங்களின் தனித்தன்மை என்ன என்று பார்க்க துவங்கினேன். ஸ்க்ரிப்டில் இருப்பதைக் காட்டிலும் கூடுதல் தகவல்கள் எனக்கு தேவையாய் இருந்தது. மரியானில் பனிமலர் அவளின் காதலில் உறுதி கொண்ட பெண்ணாக இருந்தாள். அவன் எங்கே போனாலும், அவன் என்னுடையவன் என்ற உறுதி இருந்தது. அதே சமயம் `பூ' படத்தில் மாரிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்த பின்னும் பழைய காதலை நினைத்திருப்பாள். `என்னு நின்டே மொய்தீன்' படத்தில் மொய்தீன் இறந்த பின்னும் காஞ்சனமாலாவின் காதல் மாறாது. என்னுடைய நடிப்பு, பாவனைகள் எல்லாவற்றையும் தாண்டி, அந்த கதாபாத்திரத்தின் இதயத்தை புரிந்து கொள்ள முடிந்தால் என்னுடைய நடிப்பில் அது வெளிப்படும்." என்றார் பார்வதி.