சினிமா

"தியேட்டரில் பேட்ட படத்தின் முதல் காட்சி பார்த்தது மறக்கமுடியாதது" - மாளவிகா மோகனன்

webteam

இன்னும் சில நாட்களில் தியேட்டர்கள் திறக்கப்படலாம். கொஞ்சம் கொரோனோ பயம் இருந்தாலும், தியேட்டரில் சென்று படம் பார்க்கும் அனுபவமே தனியானதுதான். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுவரும் தியேட்டர் லவ் பகுதியில் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனின் தியேட்டர் அனுபவங்கள்.

"மும்பையில் நான் தியேட்டரில் அம்மாவுடன் பார்த்த முதல் படம் ஜோ ஜீட்டா வோகி சிக்கந்தர். ஆனால் ஆரம்பகால நினைவாக இருப்பது அப்பாவுடன் (ஒளிப்பதிவாளர் கேயூ. மோகனன்) தியேட்டருக்குச் சென்று பார்த்த படம் காட்ஸில்லா. இவற்றை இரண்டு காரணங்களுக்காக நினைவில் வைத்திருக்கிறேன். ஒன்று அது தந்தை - மகள் சேர்ந்து வெளியே சென்றது, அதுவும் அம்மா, சகோதரர் இல்லாமல் சென்றுவந்தது. இரண்டாவது இவ்வளவு பெரிய மான்ஸ்டரை திரையில் பார்த்தது உற்சாகத்தை அளித்தது.

அடுத்து என்னைக் கவர்ந்த படம் பாகுபலி. நான் அமர் சித்ர கதாவின் மிகப்பெரிய ரசிகை. நான் இந்தியப் புராணங்களின் மீது ஆர்வம் கொண்டே வளர்ந்தவள். பாகுபலி என்பது வாழ்க்கையில் வரும் ஆவேசம். அப்பாவின் வேலைக்காக கேரளாவில் இருந்து மும்பைக்கு நகர்ந்துவிட்டோம். நான் முழுக்க மும்பைப் பெண்ணாகவே வளர்ந்தேன். ரஜினி படம் ரிலீசானால், அதை நான் தியேட்டரில் போய் பார்ப்பதைத் தவறவிடமாட்டேன். எப்போது அவர் படம் வெளியானாலும் திருவிழா மாதிரி கட்அவுட்டுகளைக் கட்டி விழா மாதிரி கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள்.

சிவாஜி - தி பாஸ் படத்திற்கு ஒவ்வொருவரும் எப்படி ரியாக்ட் செய்தார்கள் என்பது நினைவில் இருக்கிறது. என் நண்பர்களுடன் ஹிந்தியில் அந்தப் படத்தைப் பார்த்தேன். சென்னையில் இருந்தபோது பேட்ட படத்தை அம்மாவுடன் சேர்ந்த முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தேன். அதுவும் முதல் நாள் முதல் காட்சியாக ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களைப் பார்ப்பது எதனுடன் ஒப்பீடு செய்யமுடியாது.

அப்படியொரு கொண்டாட்டத்துக்காக மாஸ்டர் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நாங்கள் அந்தப் படத்தை குழுவாகச் சென்று முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்" என்று மாளவிகா மோகனன் ஆர்வம் பொங்க நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.