பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா சீனிவாசன் நேற்று காலமானாதையெடுத்து இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
முக்தா சீனிவாசன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த முக்தா சீனிவாசனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. அவருக்கு வயது 88. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100-ஆவது படமான சூரியகாந்தி, ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன் உட்பட பல திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் உட்பட சில திரைப்படத்தை அவர் தயாரித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முக்தா சீனிவாசன் அரசியல் பணியும் ஆற்றியுள்ளார்.
முக்தா சீனிவாசன் ஜெயலலிதா, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரங்களுடன் கலைப்பணியாற்றியவர். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று திரைத்துறையில் கோலோச்சிய முக்தா சீனிவாசனின் திரைப்பயணம் பல்வேறு சுவாரஸ்யங்களைக் கொண்டது. முக்தா சீனிவாசனின் 'தாமரைக்குளம்' திரைப்படத்தில்தான் 'நகைச்சுவைத் திலகம்' நாகேஷ் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.