(இது தர வரிசை அல்ல,மலையாள படங்கள் வெளியான வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன)
ஆனந்த் ஏகர்ஷி இயக்கிய படம் `Aattam’. 12 ஆண்கள் கொண்ட நாடகக் குழுவில் ஒரே ஒரு பெண் அஞ்சலி. ஓர் இரவில் அஞ்சலிக்கு நடக்கும் ஒரு சம்பவமும், அதற்கான எதிர்வினைகளுமாக நகர்கிறது படம். ஆண் - பெண் இடையேயான பேதங்களை பற்றி விவாதிக்கும் படம், மனித மனங்களுக்கே உள்ள குரூரத்துடன் ஆண்கள் நடந்து கொள்வதை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.
மிதுன் இமானுவேல் தாமஸ் இயக்கத்தில் ஜெயராம் நடித்த படம் `Abraham Ozler’. முன்னால் காவலதிகாரி ஒரு சீரியல் கில்லரை பிடிக்க எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை. விறுவிறுப்பான திரைக்கதையும், எதிர்பாராத திருப்பங்களும் என நகரும் படத்தின் இறுதியில், ஒரு சர்ப்ரைஸ் கேமியோவும் உண்டு.
டார்வின் குரியாகோஸ் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த படம் `Anweshippin Kandethum'. சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் அவரது குழு இருவேறு வழக்குகளை விசாரிக்கிறது. ஒன்று திடீரென காணாமல் போகும் லவ்லி மாதனுக்கு என்ன ஆனது? என்ற வழக்கு. இன்னொன்று ஸ்ரீதேவி கொலை வழக்கு. இந்த இரண்டையும் ஆனந்த் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.
Thanneer Mathan Dinangal, Super Sharanya என இரண்டு சிறப்பான படங்களைக் கொடுத்த கிரிஷ், அடுத்து இயக்கிய படம் `Premalu'. சச்சினுக்கு ரீனு மேல் காதல், அந்தக் காதலை சொல்ல அவன் படும் பாடுகளும், காமெடிகளுமே கதை. படத்தின் ஒன்லைன் அத்தனை எளிமையாக இருந்தாலும், சீனுக்கு சீன் வெடித்து சிரிக்க வைக்கும் கிரிஷ் ட்ரீட்மெண்ட், மகா என்டர்டெய்ன்மென்ட்.
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த படம் `Bramayugam’. 17ம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. தேவன் என்ற பாடகன், ஒரு வீட்டில் தஞ்சமடைகிறான். அவ்வீட்டின் எஜமான், சமையல்காரன் மற்றும் தேவன் இடையே அடுத்து நடப்பவையே கதை. ப்ளாக் அண்ட் ஒய்டில் ஒரு ஹாரர் படம் என்பது ஓர் சுவாரஸ்யம் என்றால், படத்தில் நன்மை தீமைக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் மூலம் கூடுதல் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார் ராகுல்.
டான் பலத்தாரா இயக்கத்தில் வினய் நடித்த படம் `Family'. சோனி, கேரளா கிராம ஒன்றில் வசிக்கும் இளைஞன். மேலோட்டமாக பார்த்தால் அனைவரிடத்தும் இனிமையாகப் பழகும், மிகப் பண்பான ஒருவனாக இருக்கும் சோனிக்கு, மிக மோசமான ஒன்னொரு பக்கமும் இருக்கிறது. எத்தகைய குற்றமும் ஒரு குடும்பத்தின் கௌரவத்துக்காக மறைக்கப்படும் அதன் உள் அரசியல் மிக அழுத்தமாக பேசப்பட்டிருக்கும் படம்.
Jan. E. Man படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சிதம்பரம் பொடுவல் அடுத்ததாக இயக்கிய படம் `Manjummel Boys'. இவ்வருடத்தில் மிகப்பெரிய ஹிட்டான மலையாள சினிமா. நண்பர்கள் குழு ஒன்று குணா குகையை பார்வையிட செல்கிறது. எதிர்பாராத விதமாய் ஒரு நண்பர் அங்கு சிக்கிக் கொள்ள, அவரை மீட்கும் சர்வைவல் த்ரில்லரே படம்.
உல்லாஸ் செம்பன் இயக்கியிருக்கும் படம் `Anchakkallakokkan’. ஊரில் பெரிய ஆள் ஒருவர் கொலை செய்யப்பட, கொன்றவனை போலீஸும் இறந்தவரின் மகனும் தேடுகிறார்கள். அந்த சமயத்தில் கொலையை செய்தது நான் தான் என சரணடைகிறான் ஒருவன். அதன் பின் நடப்பவையே கதை. சிறப்பான ஆக்ஷன் காட்சிகளுடன் பரபரவென நகரும் படம்.
ப்ளஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடித்த படம் `Aadujeevitham’. பிழைப்பு தேடி சவுதி செல்லும் நஜீப், அங்கு சந்திக்கும் அவஸ்தைகளும், அங்கிருந்து தப்ப எடுக்கும் முயற்சிகளுமே கதை. நஜீப் என்பவரின் வாழ்வில் நடந்த நிகழ்வை வைத்து பென்யாமின் எழுதிய `ஆடுஜீவிதம்’ நாவலின் சினிமா வடிவமே படம். பல விருதுகள் வாங்கிய படம், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
`Romancham’ படம் மூலம் கவனம் ஈர்த்த, ஜிது மாதவன் இயக்கி ஃபகத் பாசில் நடித்த படம் `Aavesham’. காலேஜ் ரேகிங் தொல்லையை சமாளிக்க பெரிய கேங்க்ஸ்டரை தேடுகிறார்கள் நண்பர்கள் மூவர். அதன் பின் நடப்பவையே கதை. காமெடி, ஆக்ஷன், ட்ரெண்டிங் பாடலான இலுமினாட்டி என படு ஜாலியான கலர்புல் படம்.
`Hridayam' பட ஹிட்டுக்குப் பிறகு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய படம் `Varshangalkku Shesham'. சென்னை மெட்ராஸாக இருந்த காலத்தில், இங்குள்ள சினிமா உருவாக்கம் பற்றியும், அதில் பணியாற்ற வந்த இரு நண்பர்கள் பற்றியும் சொல்லும் கதை. நட்பு, துரோகம், மன்னிப்பு என பல உணர்வுகளை பற்றி பேசுகிறது படம்.
`புலிமுருகன்' புகழ் வைசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த படம் `Turbo’. டர்போ ஜோஷ் என்பவர் எதிர்பாராத விதமாக வெற்றிவேல் என்ற கேங்ஸ்டருடன் மோதும் சூழல் உருவாகிறது. அதன் பின் நடக்கும் ஆக்ஷனே படம். வழக்கமான ஆக்ஷன் மாஸ் மசாலா படம் என்றாலும், மம்மூட்டியின் எனர்ஜியான நடிப்பும், தரை லோக்கல் சண்டை காட்சிகளும் படத்தை சிறப்பான பொழுதுபோக்காக மாற்றுகிறது.
ஜிஸ் ஜாய் இயக்கத்தில் பிஜு மேனன், ஆசிப் அலி நடித்த படம் `Thalavan’. காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜெயசங்கர் மீது ஒரு கொலைப் பழி விழுகிறது, அந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் கார்த்திக் உண்மையை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை. பல திருப்பங்களுடன் பரபரப்பாக நகரும் படம்.
சம்ஜத் இயக்கத்தில் உருவான படம் `Golam’. வி டெக் நிறுவன மேலாளர் ஐசக் ஜான் அவரது அலுவலக அறையின் கழிவறையில் இறந்து கிடக்கிறார். இது கொலையா? விபத்தா? என அலுவலக ஊழியர்களை விசாரிக்கிறார் ஐபிஎஸ் அதிகாரி சந்தீப். அந்தக் கொலைக்கு பின் இருக்கும் மர்மத்தை எப்படி அவர் அவிழ்க்கிறார் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் கூறியிருக்கிறார்கள்.
கிறிஸ்டோ இயக்கத்தில் பார்வதி, ஊர்வசி நடித்த படம் `Ullozhukku’. மரணப்படுக்கையில் இருந்த அஞ்சுவின் கணவன் ராஜிவ் இறந்துவிடுகிறார். அவரைப் புதைக்க தடையாக நிற்கிறது ஊரை சூழ்ந்திருக்கும் வெள்ளம். வெள்ளம் வடியும் வரை கணவனின் தாய் லீலம்மாவுடன் காத்திருக்கிறாள் அஞ்சு. இந்த காத்திருப்பு காலத்தில் வெளிப்படும் உண்மைகள், அதன் விளைவுகள் என்ன என்பதே கதை.
அருண் சந்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Gaganachari'. 2040ல் நடக்கும் டிஸ்ட்ரோபியன் ஃபீயூச்சரில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் மூன்று ஆண்கள் தங்கியிருக்கும் வீட்டுக்குள் ஒரு பெண் நுழைகிறாள். இதற்குள் ஒரு ஏலியன் கான்செப்ட்டை கொண்டு வந்து சைன்ஸ் பிக்ஷன், சோஷியல் - பொலிட்டிகல் சட்டையர் காமெடியை கலந்து கொடுத்தார்கள். வித்தியாசமான படங்கள் பிடிப்பவர்கள், தவற விடாமல் பார்க்கலாம்.
அர்ஃபாஸ் இயக்கியுள்ள படம் `Level Cross'. ஆள் அரவமற்ற ஒரு லெவல் க்ராஸிங்கில் கேட் கீப்பர் ரகு. விபத்து ஒன்றால் அடிபட்டு விழுந்துகிடக்கும் சைத்தாலி என்ற பெண்ணை காப்பாற்றி ஆதரவளிக்கிறான். அதன் பின் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் ரகசியங்கள் என்ன? அதில் எது உண்மை போன்றவற்றை வைத்து நடக்கும் த்ரில்லர் தான் கதை.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பேசில் ஜோசப் நடித்த படம் `Nunakuzhi’. பணக்கார இளைஞன், காவலரிடம் சிக்கிக் கொண்ட தன் லேப்டாப்பை மீட்டு வர கிளம்புகிறார். அந்த ஓர் இரவில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை காமெடியாக சொல்கிறது படம்.
ஆனந்த் இயக்கிய படம் `Vaazha’. பள்ளிப் பருவத்திலிருந்து ஒன்றாக இருக்கும் நண்பர்கள் குழு ஒன்று, குடும்பத்தினரால் உருப்படாதவர்கள் என முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்கள் வாழ்வில் என்ன செய்கிறார்கள், இவர்களின் வாழ்க்கை முன்னேறியதா? என்பதை சொல்கிறது படம்.
தின்ஜித் இயக்கத்தில் ஆசிஃப் அலி நடித்த படம் `Kishkindha Kaandam'. தொலைந்து போன துப்பாக்கியை கண்டுபிடிக்கும் வேளையில் வெளிவரும் பல உண்மைகளே கதை. ஒரு ஸ்லோபர்ன் திரைக்கதையில் சுவாரஸ்யமாக நகரும் கதையாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். மிஸ்ட்ரி த்ரில்லர் விரும்பிகள் தவற விடக்கூடாது.
பாயல் கபாடியா இயக்கிய படம் `All We Imagine As Light '. மும்பையில் வசிக்கும் பிரபா, அனு என்ற இரு நர்ஸ்களின் வழியாக பெண்களின் வாழ்வியல் சிக்கல்களை பேசுகிறது படம். உலக திரைவிழாக்கள் பலவற்றில் பாராட்டுகளை பெற்ற படம், கேன்ஸ் திரை விழாவில், க்ராண்ட் பிரிக்ஸ் விருது வென்றது. சமீபத்தில் இந்திய திரையரங்குகளில் வெளியான இப்படம், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும்.
ஜிதின் ராஜ் இயக்கிய படம் `Pallotty 90s Kids’. கண்ணன் மற்றும் உன்னி என்ற இரு சிறுவர்களின் நட்பு, ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்ற அழகான பயணமே படம். 90களின் நினைவுகள் பலவற்றை கிளறும்படி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை மிக அழகு.
எம் சி ஜிதின் இயக்கத்தில் நஸ்ரியா, பேசின் ஜோசப் நடித்த படம் `Sookshmadarshini’. வெகு நாட்களுக்குப் பின் ப்ரியதஷினியின் எதிர்வீட்டுக்கு, அவ்வீட்டின் உரிமையாளரும் அவரது மகன் இமானுவேலும் திரும்ப வருகிறார்கள். முதலில் எல்லாம் சகஜமாக இருந்தாலும் பின்பு இமானுவேல் ஏதோ ஒரு தவறு செய்கிறார் என நினைத்து துப்பு துலக்குகிறார் ப்ரியதஷினி. என்ன நடந்தது என்பதே கதை. க்ரைம் த்ரில்லருடன் சேர்த்து, காமெடியையும் நேர்த்தியாக கலந்த விதத்தில் வித்தியாசப்படுகிறது படம். இப்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது படம்.
லிஜின் ஜோஸ் இயக்கத்தில் ஊர்வசி, பார்வதி, லிஜோ மோல், ரம்யா நம்பீசன், ஐஸ்வர்யா ராஜேஷ் எனப் பலரும் நடித்த ஆந்தாலஜி படம் `Her’. பெண்கள் சந்திக்கும் இடைஞ்சல்கள் பெரியதோ சிறியதோ, அது அவர்களை எப்படி சகஜமான வாழ்க்கையை மேற்கொள்ள தடையாக இருக்கிறது என்பதை சொல்கிறது ஒவ்வொரு கதையும்.
ஆஷிக் அபு இயக்கத்தில் திலீஷ் போத்தன், அனுராக் காஷ்யப், சுரபி லக்ஷ்மி, தர்ஷனா ராஜேந்திரன் எனப் பலரும் நடித்த படம் `Rifle Club'. ரைபிள் க்ளப் ஒன்றில் அதன் உறுப்பினர்களுக்கு இடையே உயிர் பிழைக்க நடக்கும் போராட்டம் ஒருபுறம், ஆயுத வியாபாரி ஒருவரின் பகை மறுபுறம் சேர இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. கடைசியாதான் வந்தார் விநாயக் என்பதை போல, வருட இறுதியை மாஸாக முடித்து வைத்திருக்கிறது படம். இப்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது படம்.