இசையின் அவுட் புட் முக்கியம் என்று இசையமைப்பாளர் சத்யா கூறியிருக்கிறார்.
எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சத்யா. அதன் பின் இவரது தீயா வேலை செய்யணும் குமாரு பெரிய வரவேற்பை எட்டியது. அடுத்து நெடுஞ்சாலை, பொன்மாலை பொழுது, இவன் வேற மாதிரி, காஞ்சனா 2 என மளமளவென்று ஏறியது இவரது படப் பட்டியல்.
இவர் சினிமாவுக்குள் வந்து 6 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் அளவான படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். இதுவரை 15 படங்கள் என்பது மிக குறைவான அளவாக இருக்கிறதே என்று அவரிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது.
படங்களின் பட்டியல் முக்கியமே இல்லை. இசையின் அவுட் புட் முக்கியம். நான் நினைத்திருந்தால் நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருக்க முடியும். கோடம்பாக்கத்தின் பெரிய நடிகர்களின் பல படங்கள் என்னை தேடி வந்தது உண்மை. ஆனால் அதை ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் இருந்தது. சரியான நேரத்தில் சரியான சமயத்தில் பாடல்களை கொடுத்தாக வேண்டும். பின்னணி இசையை முடித்தாக வேண்டும். அப்படி வேகமாக செய்து முடித்துவிட முடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது. அதனால் பல படங்களை தவிர்த்துவிட்டேன். இனிமேல் அப்படி இருக்க போவதில்லை. எனது தன்னம்பிக்கை கூடியிருக்கிறது. பக்கா, பயமா இருக்கு ஆகிய படங்களின் இசையை வேகமாக முடித்து தந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சத்யா.