தக் லைஃப் படத்தை பாராட்டிய ஜேம்ஸ் வசந்தன் fb
சினிமா

’Thug Life' மிக நல்ல படம்.. ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் பாராட்டியிருப்போம்! - ஜேம்ஸ் வசந்தன்

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த தக் லைஃப் திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படத்தை பாராட்டியுள்ளார்.

Rishan Vengai

நாயகன் திரைப்படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவான திரைப்படம் ’தக் லைஃப் (Thug Life)’. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு, நாசர், த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் என பல்வேறு திரை நட்சத்திரங்கள் இணைந்ததாலும், படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதாலும் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

அதிலும் இசை வெளியீட்டுவிழாவில் சின்மயி வெர்சனில் ’முத்தமழை’ பாடல், கன்னட மொழி குறித்து கமலின் கருத்து என எல்லா பக்கமும் படம் சார்ந்த பேச்சுகள் அதிகமாகி ஹைப் கொடுக்க, ஜுன் 5-ம் தேதி திரையரங்கில் வெளியானது.

kamal starring thug life movie review

ஆனால் கேங்க்ஸ்டர் பின்னணியில் வெளிவந்த தக் லைஃப் திரைப்படம், அதிகப்படியான ரசிகர்களை ஈர்ப்பதில் கோட்டைவிட்டது. பல ரசிகர்கள் படம் நாயகனை போல் இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பில் திரைக்குவந்து ஏமாற்றத்துடன் திரும்பியதாக வேதனை தெரிவித்தனர். பல தரப்பினர் படத்தினை மிக மோசமாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் தக் லைஃப் திரைப்படம் சிறப்பாக இருந்ததாகவும், மணிரத்னமும் கமல்ஹாசனும் ரஹ்மானும் ரவி K சந்திரனும் இந்தியாவுக்கு கிடைத்த வரங்கள் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டியுள்ளார்.

ஆங்கில படமாக இருந்தால் ரசித்து பாராட்டியிருப்போம்..

தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜேம்ஸ் வசந்தன், சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக, தொடர்ந்து ‘நாணயம்’, ‘பசங்க’, ‘ஈசன்’ உள்ளிட்ட பலப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தக் லைஃப் படம் குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஜேம்ஸ் வசந்தன், “நேற்றிரவு 'Thug Life' படம் பார்த்தேன். அசந்துவிட்டேன். நல்ல படம். மிக நல்ல படம். ஆனால் ஏன் இதை சிலர் மோசமாக விமர்சித்தார்கள் என்பது எனக்கு கொஞ்சம்கூட விளங்கவில்லை.

ஒரு underworld gangster படத்துக்குத் தேவையான எல்லாமும் சரியான விகிதத்தில் இருந்தது. இதுவே English மொழியில் ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தால் ரசித்துப் பாராட்டியிருப்போம்; அல்லது ரசித்தது போல நடித்திருப்போம்.

ஒரு நல்ல படத்தின் அத்தனை அம்சங்களும் உயர்தரத்தில் இருந்தன. ஆழமான கதை, அட்டகாசமானத் திரைக்கதை, அசரவைக்கிற locations, அதை அருமையாகக் கண்முன் கொண்டுவந்த ஒளிப்பதிவு, சர்வதேச தரத்தில் பின்னணி இசை, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்கள், அவர்களின் அடக்கமான நடிப்பு, அற்புதமான ஒலிக்கலவை, படத்தை விறுவிறுப்பாக்கிய படத்தொகுப்பு என எல்லாமே ஒருசேர அசத்திய கலவை. ஒரு காட்சிகூட சலிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வியப்பு!

முடிவை பலவிதத்தில் சிந்தித்துப் பார்த்தேன்.சிம்புவின் கதாபாத்திரம் இறக்காமல், கமல் கதாபாத்திரம் இறந்திருந்தால் எப்படியிருக்கும்?

இரு கதாபாத்திரங்களும் இறந்து நாசர் கதாபாத்திரம் நிலைத்து நின்றால் எப்படியிருக்கும்?

எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் படத்தின் சிறப்புக்கும் அதற்கும் தொடர்பில்லை. வெவ்வேறு உணர்வுகளோடு வெளியேறியிருப்போம், அவ்வளவுதான்.

இதுவரை இந்தப்படத்தைப் பார்க்காதவர்கள் போய்ப்பாருங்கள். சமூக ஊடகங்கள் அரசியலையும் கலையையும் போட்டுக் குழுப்பிக்கொள்கிற மலிவான காலகட்டத்தின் சித்து விளையாட்டுகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

மணிரத்னமும் கமல்ஹாசனும் ரஹ்மானும் ரவி K சந்திரனும் இந்தியாவுக்குக் கிடைத்த வரங்கள்” என்று பாராட்டி பேசியுள்ளார்.