சினிமா

மாநிலங்களவை நியமன எம்.பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா - பிரதமர் மோடி வாழ்த்து

சங்கீதா

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் தடகள வீராங்கனை பி.டி உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஆகின்றனர். 

மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷா ஆகியோருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இளையராஜாவின் புகைப்படத்தை பகிர்ந்து, “படைப்புகளின் மேதை இளையராஜா, தனது இசையால் தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன.  பின் தங்கிய வாழ்க்கை பின்னணியில் இருந்து மேலெழுந்து வந்து பல்வேறு சாதனைகளை அவர் செய்து காட்டியுள்ள அவரது வாழ்க்கையானது பலருக்கும் ஊக்கத்தை அளிக்கிறது. அவர் மாநிலங்களவை எம்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் இளையராஜாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

முன்னதாக, 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்த இளையராஜா, பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் இருவரின் சிந்தனை மற்றும் செயலில் ஒற்றுமை உள்ளது என்றும் புகழ்ந்து இருந்தார். அதற்கு முன்பு வரை அரசியல் தொடர்பாக எவ்வித கருத்தும் அவர் தெரிவித்தது இல்லை என்பதால் இந்த புத்தக முன்னுரை பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இளையராஜாவின் அந்த முன்னுரை தொடர்பாக விவாதங்களும் அரங்கேறின. அதேவேளையில், குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான போட்டியில் இளையராஜா பெயரும் இருப்பதாக பேசப்பட்டது. இருப்பினும், நேரடியாக இளையராஜ எவ்வித பேட்டியும் கொடுக்கவில்லை. இளையராஜா விளக்கம் கொடுத்ததாக அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தான் விளக்கம் கொடுத்தார்.

இத்தகைய சூழலில் தற்போது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நியமன எம்பி ஆக இளையராஜா ஆகிறார். கங்கை அமரன் பாஜகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F797800861584650%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>