தேவா - சபேஷ் web
சினிமா

"இனி எந்த ஜென்மத்தில் சபேஷ் எனக்கு தம்பியாக கிடைப்பான்.." - கண்ணீர்மல்க பேசிய தேவா

சகோதரர் சபேஷ் உயிரிழப்பு ஒரு கையே போய்விட்டதாக இசையமைப்பாளர் தேவா கண்ணீர் மல்க பேசியுள்ளார்..

PT WEB

சகோதரர் சபேஷ் உயிரிழப்பு ஒரு கையே போய்விட்டதாக இசையமைப்பாளர் தேவா கண்ணீர் மல்க பேசியுள்ளார்..

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளரும், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான சபேஷ் சென்னையில் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சபேஷின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அவரது உடல் வளசரவாக்கம் பிருந்தாவனம் நகரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இசையமைப்பாளர் சபேஷின் உடலுக்கு பாடகர்கள் மனோ, அனுராதா ஶ்ரீராம், ஸ்வேதா மோகன், சுஜாதா மோகன், இயக்குநர்கள் பாண்டியராஜன், ஆர் வி உதயகுமார், பேரரசு, சமுத்திரகனி, கருணாஸ், நாசர், எடிட்டர் மோகன், அவரது மகன் மோகன் ராஜா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

ஒரு கையே போய்விட்டது போல் உள்ளது..

செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் தேவா, எங்கள் குடும்பத்தில் நாங்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு ரொம்ப பக்கபலமாக இருந்தவர் சபேஷ். நாங்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏதாவது மிராக்கள் நடக்குமா என்று எதிர்பார்த்துதான் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் வைத்திருந்தோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை, 12.15 மணி அளவில் உயிரிழந்துவிட்டார். 

Sabesh

25ஆம் தேதி பாரிசில் எனக்கு ப்ரோக்ராம் இருந்தது. ஆனால் எனது தம்பியை இப்படி பார்த்துவிட்டு நான் எப்படி போய் பாடுவேன். எனது வலியை புரிந்து கொண்டு பாரிஸ் மக்கள் அடுத்த வருடம் வந்து பாடுங்கள் என கூறிவிட்டார்கள் அது எனக்கு மிக ஆறுதலாக இருந்தது. இனி எந்த ஜென்மத்தில் சபேஷ் எனக்கு தம்பியாகவும், நான் அவனுக்கு அண்ணனாகவும் பிறக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. 

எனது சகோதரர்கள் இல்லை என்றால் நான் இத்தனை படத்திற்கு இசையமைத்திருக்க முடியாது. நாங்கள் கடந்த 16 வருடங்களாக திங்கள் முதல் சனிவரை பிரசாத் ஸ்டுடியோவில் தான் இருந்தோம், ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் வீட்டில் இருப்போம். இப்போது ஒரு கையே போய்விட்டது. சபேஷ் பாடிய பாடல்கள் அத்தனையும் ஹிட் சாங்ஸ் தான் என தெரிவித்தார்.